Select Page

City Union Bank



Share this page

ரியாத்: “மத்தியக் கிழக்கு நாடான, ஈரானைக் கட்டுப்படுத்தாவிட்டால், சர்வதேச அளவில், கச்சா எண்ணெய் விலை, நமது வாழ்நாளில் பார்த்திராத வகையில், கற்பனையில்கூட நினைத்து பார்க்காத அளவுக்கு கடுமையாக உயரும்,” என, வளைகுடா நாடான, சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர், முகமது பின் சல்மான் எச்சரித்துள்ளார்.

ஈரான் உடனான அணு ஒப்பந்தத்தை, அமெரிக்கா ரத்து செய்ததுடன், பொருளாதாரத் தடையையும் விதித்தது. இதனால், அமெரிக்கா, ஈரான் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.இந்த நிலையில், மத்தியக் கிழக்கு நாடான யேமனில், அரசுப் படைகளுக்கு எதிராக, ஹவுதி பயங்கரவாத அமைப்பு தாக்குதல்களை நடத்தி வருகிறது. அரசு படைகளுக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி அமைப்புக்கு ஈரானும் ஆதரவாக உள்ளன.

இந்தப் பிரச்னைகளால், சவுதி அரேபியாவுக்கும், ஈரானுக்கும் இடையே, மோதல் போக்கு இருந்து வருகிறது. சமீபத்தில், சவுதி அரேபியாவின், ‘அராம்கோ’ எண்ணெய் நிறுவனத்தின், உலகின் மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில், ‘ட்ரோன்’ எனப்படும், ஆளில்லா சிறிய விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. அதனால், எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டு, சர்வதேச அளவில், எண்ணெய் விநியோகமும் தடைபட்டது.

இந்த நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த, ‘டிவி’யில், ’60 நிமிடங்கள்’ என்ற நிகழ்ச்சியில், சவுதி இளவரசர், முகமது பின் சல்மானின், பேட்டி ஒளிபரப்பானது.
சவுதி அரேபியாவில் எடுக்கப்பட்ட இந்தப் பேட்டியில், அவர் கூறியதாவது:
ஈரானை, உலக நாடுகள் கட்டுப்படுத்தாவிட்டால், பிரச்னை மேலும் தீவிரமடைந்து, உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்து விடும். எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, விலை கடுமையாக உயரும். நமது வாழ்நாளில் இதுவரை நாம் பார்த்திராத வகையில், கற்பனையில் கூட நினைத்து பார்க்காத அளவுக்கு, எண்ணெய் விலை உயரும்.

‘சவுதி அரேபியாவில், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில், நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, ஈரானே காரணம்’ என, அமெரிக்க வெளியுறவு அமைச்சர், மைக் போம்பியா கூறியுள்ளார். அதை நான் ஒப்புக் கொள்கிறேன். இந்த நடவடிக்கை, ஈரானின் போர் முயற்சியே. ஆனால், ஈரானுடன், அரசியல் ரீதியாக, அமைதி பேச்சு நடத்தி, தீர்வு காண்பதையே நாங்கள் விரும்புகிறோம்.

ஈரான் மற்றும் சவுதி அரேபியா இடையே போர் நடந்தால், உலகப் பொருளாதாரம், கடும் பாதிப்பை சந்திக்கும். ராணுவ நடவடிக்கைகளை விட, அரசியல் மற்றும் அமைதி தீர்வு ஏற்படுவதே சிறந்ததாக இருக்கும்.

சமீபத்தில், அமெரிக்காவில் நடந்த, ஐ.நா., கூட்டத்தின்போது, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பேச்சு நடத்துவதற்கான முயற்சி தோல்வி அடைந்து விட்டது. ஈரான் அதிபர், ஹாசன் ரூஹானியுடன், அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் பேச்சு நடத்த வேண்டும். அணு ஒப்பந்தம் தொடர்பாக ஒரு தீர்வு ஏற்பட்டால்தான், மத்தியக் கிழக்கு பிராந்தியத்தில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

 

‘நான் கொல்லவில்லை


‘டிவி’ பேட்டியில், சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர், முகமது பின் சல்மான், மேலும் கூறியதாவது:அமெரிக்காவில் இருந்து வெளிவரும், ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையில் எழுதி வந்த, சவுதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர், ஜமால் கசோக்கியை நான் கொல்லவில்லை. அவரைக் கொல்லும்படி எந்த உத்தரவையும் நான் பிறப்பிக்கவில்லை.
இந்தக் கொடூர கொலையில், சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர். அதனால், அதற்கு நான் பொறுப்பேற்கிறேன். எதிர்காலத்தில், இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்க, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.


Share this page