Select Page

City Union Bank



Share this page

பெங்களூரு:நில முறைகேடு வழக்கில் இருந்து, ம.ஜ.த.,வை சேர்ந்த முன்னாள் முதல்வர், குமாரசாமியை விடுவித்து, லோக் ஆயுக்தா போலீசார் வழங்கிய நற்சான்றை, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ரத்து செய்து, அக்., 4ல், விசாரணைக்கு ஆஜராகும்படி, நேற்று அதிரடி உத்தரவிட்டது.ம.ஜ.த.,வை சேர்ந்த குமாரசாமி, 2007ல் முதல்வராக இருந்தார். அப்போது, பெங்களூருவின் ஹலகேவடேரஹள்ளியில் உள்ள, 3.24 ஏக்கர் நிலத்தை முறைகேடாக மாற்றி உறவினர்களுக்கு அளித்ததாக, சாம்ராஜ்நகரை சேர்ந்த சமூக ஆர்வலர் மஹாதேவசாமி, 2012ல் லோக் ஆயுக்தாவில் புகார் செய்தார்.

 

குமாரசாமி இரண்டாவது முறையாக முதல்வராக இருந்தபோது, ‘இவ்வழக்கில், குமாரசாமி குற்றம் செய்யவில்லை’ என, லோக் ஆயுக்தா போலீசார், ஆறு மாதங்களுக்கு முன், நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர்.இதை எதிர்த்து, மஹாதேவசாமி, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, நீதிபதி ராமசந்திரா உத்தார் முன்னிலையில், நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, 2012 முதல் அமைதியாக இருந்து விட்டு, ஆறு மாதங்களுக்கு முன், லோக் ஆயுக்தா போலீசார் அறிக்கை தாக்கல் செய்ததற்கு, நீதிபதி கடும் அதிருப்தி தெரிவித்தார்.பின், அவர் பிறப்பித்த உத்தரவு விபரம்:போலீசார் தாக்கல் செய்த, அறிக்கை நிராகரிக்கப்படுகிறது. கர்நாடக நிலம் கட்டுப்பாடு சட்டத்தை மீறி, நில முறைகேடு செய்துள்ளதாக புகார் வந்துள்ளது. இதனால் குற்றஞ்சாட்டப்பட்ட நபர், அக்., 4ம் தேதி, விசாரணைக்கு ஆஜராக வேண்டும்.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதனால், குமாரசாமி விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து தப்பிக்கவும், அடுத்தகட்ட நடவடிக்கை பற்றியும், சட்டவல்லுனர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.


Share this page