புதுடில்லி : கட்டுமானத் துறையினர் மற்றும் வீடு வாங்க விரும்புவோரிடம், மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன், நேற்று ஆலோசனை நடத்தினார். அதில், இரு துறையினரின் முக்கிய கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என, உறுதியளித்தார்.
டில்லியில் நேற்று, அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த உயர் மட்டக்குழு கூட்டத்தில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர், ஹர்தீப் சிங் பூரி, நிதித் துறை இணையமைச்சர், அனுராக் தாக்குர் பங்கேற்றனர். மேலும், பொருளாதார விவகாரங்கள், நிதி, வீட்டு வசதி போன்ற துறைகளின் உயரதிகாரிகளும் பங்கேற்றனர். இரண்டு தனி கூட்டங்களாக நடந்த ஆலோசனையில், கட்டுமானத் துறையின் இரு முக்கிய அமைப்புகளான, ‘கிரெடாய்’ மற்றும் ‘நாரெட்கோ’ நிர்வாகிகளை, அமைச்சர் சந்தித்தார்.
பின், வீடு வாங்க விரும்பும் பொதுமக்கள் சார்பிலான சங்கங்களுடன் கலந்து பேசி, இரு தரப்பினர் தேவைகளையும், அமைச்சர் அறிந்தார். இதையடுத்து, பத்திரிகையாளர்களை சந்தித்த, அமைச்சர், ஹர்தீப் சிங் பூரி கூறியதாவது: நிதியமைச்சருடனான சந்திப்பு, மிகவும் ஆக்கப்பூர்வமாக இருந்தது. இரு தரப்பினரையும் தனித்தனியாக சந்தித்து, அவர்களின் கோரிக்கைகள், பிரச்னைகள், அதை தீர்க்கும் முறைகளை, அமைச்சர் கேட்டறிந்தார்.
பிரச்னைகளுக்கு தீர்வுகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகள், விரைவில் அறிவிக்கப்படும் என, அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்தார். இவ்வாறு, அவர் கூறினார். இந்த கூட்டத்தில் பங்கேற்ற, வீடு வாங்க விரும்புவோர் சங்கத்தினர், ‘நாடு முழுவதும், ஐந்து லட்சம் பேர், குறிப்பிட்ட காலத்தில் வீடுகள் வழங்கப்படாததால், பாதிக்கப்பட்டுள்ளனர்’ என்றனர்.
‘முடங்கிக் கிடக்கும் கட்டுமானத் திட்டங்களை செயல்படுத்த, 10 ஆயிரம் கோடி ரூபாயை, மத்திய அரசு, நெருக்கடி நிதியமாக ஏற்படுத்த உதவ வேண்டும்’ என, கட்டுமானத் துறையினர் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த சந்திப்பு ஆக்கப்பூர்வமாக இருந்ததாக, கிரெடாய் தலைவர், ஜேக்சி ஷா, நாரெட்கோ தலைவர், நிரஞ்சன் ஹிராநந்தினி கூறினர்.