சென்னை: வேலுார் லோக்சபா தொகுதி, ஓட்டு எண்ணிக்கை, இன்று நடக்க உள்ளது.
வேலுார் லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி சார்பில், புதிய நீதிக் கட்சி தலைவர், சண்முகம், தி.மு.க., சார்பில், கதிர் ஆனந்த் உள்ளிட்ட, 28 பேர் போட்டியிட்டனர்.கடந்த, 5ம் தேதி, ஓட்டுப்பதிவு நடந்தது. மொத்தம், 71.51 சதவீதம் ஓட்டுகள் பதிவானது.

பதிவான ஓட்டுகள், சட்டசபை தொகுதி வாரியாக, இன்று காலை, 8:00 மணிக்கு, எண்ணப்பட உள்ளன.ஓட்டு எண்ணும் மையத்தில், மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில், 1,073 போலீசார்; 100 துணை ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். முதலில், தபால் ஓட்டுகள் எண்ணப்பட உள்ளன.ஓட்டு எண்ணிக்கை முடிந்த பின், ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், குலுக்கல் முறையில், ஐந்து ஒப்புகை சீட்டு இயந்திரம் தேர்வு செய்யப்பட்டு, அதில் உள்ள ஒப்புகை சீட்டுகள் எண்ணப்படும்.வேலுார் தேர்தல் முடிவுகளால், ஆட்சி மாற்றம் எதுவும் ஏற்படப் போவதில்லை. எனினும், அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., தலைமை, தேர்தல் முடிவுகளை, ஆவலுடன் எதிர்பார்த்தபடி உள்ளன.
ரூ.100 கோடிக்கு சூதாட்டம்?
வேலுார் லோக்சபா தொகுதியில், யார் வெற்றி பெறுவார் என்ற, ‘ஆன்லைன் சூதாட்டம்’ ஜூலை, 27ல், துவங்கியது. எம்.பி.,யாக போவது யார்? ஏ.சி. சண்முகம் அல்லது கதிர்ஆனந்த் என்ற கேள்விக்கான பதிலை, ஆன்லைனில், ‘டிக்’ செய்ய வேண்டும்.இதில், 10 ஆயிரம் முதல், 1 கோடி ரூபாய் வரை, பணம் வைத்து சூதாடலாம். இந்த சூதாட்டத்துக்கு கடைசி நாள் ஆக., 5 ஆக இருந்தது. தற்போது, நேற்று மதியம், 2:00 மணி வரை நீட்டிக்கப்பட்டது. இன்று, தேர்தல் முடிவுகள் வந்ததும், சரியாக, ‘டிக்’ செய்தவர்களுக்கு, கட்டிய பணத்தை விட, இரண்டு மடங்கு, குலுக்கல் முறையில், 100 பேருக்கு மட்டும் வழங்கப்படும்.இது குறித்து, போலீசார் கூறியதாவது:நேற்று கடைசி நாள் என்பதால், 5 கோடி ரூபாய்க்கு, சூதாட்டத்தில் பணம் கட்டி உள்ளனர். இதுபோல, மேலும் நான்கு பேர் சூதாட்டம் நடத்துகின்றனர். அதில், கட்டிய பணத்தை விட இரண்டு மடங்கு, மூன்று மடங்கு பணம் கொடுப்பதாக கூறியுள்ளனர்.அரசியல் செல்வாக்கு மிக்கவர்கள், இந்த சூதாட்டத்தை நடத்துவதால், எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதுவரை, 100 கோடி ரூபாய்க்கு, பணம் கட்டியுள்ளதாக தெரிகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.