புதுடில்லி: மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுங்கள் என காங். கட்சியினருக்கு எம்.பி.,ராகுல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கேரளா, கர்நாடகா, மஹாராஷ்ரா, குஜராத், ஒடிசா, அசாம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக அந்த மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் ரெட் அலர்ட் (அதிக பட்ச மழை ) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மழை பாதித்த பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், ராணுவத்தினர் ஆகியோர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மழை, வெள்ளத்திற்கு நூற்றுக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் மழை வெள்ள பாதிப்பு குறித்து டுவிட்டரில் காங். எம்.பி., ராகுல் கூறியது, மாநிலங்களில் பெய்த மழையால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு காங். கட்சியினர் உதவ வேண்டும். பிரதமர் கவனம் செலுத்தி வேண்டிய உதவிகளை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் மீண்டுவர இறைவனை பிரார்திக்கிறேன். இவ்வாறு ராகுல் தெரிவித்துள்ளார்.