புதுடில்லி: முன்னாள் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மாரடைப்பால் இன்று (ஆக்.06) காலமானார்.
பா.ஜ.,வின், மூத்த தலைவர்களில் ஒருவர், சுஷ்மா சுவராஜ், 67 , கடந்த 2014 லோக்சபா தேர்தலில், மத்திய பிரதேச மாநிலம், விதிஷா தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். மோடி அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சராக திறம்பட பணியாற்றினார். சர்க்கரை நோயாளியான சுஷ்மாவுக்கு, 2016ல், சிறுநீரகங்கள் செயல் இழந்தன. டில்லி, ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில், அவருக்கு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.இதையடுத்து நடந்து முடிந்த 2019 லோக்சபா தேர்தலில் போட்டியிடாமல் தீவிர அரசியலில் இருந்து விலகினார்.

இந்நிலையில், சுஷ்மாவுக்கு இன்று (ஆக.,06) திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.

கவலைக்கிடமாக அவர் இருந்ததாக தகவல்கள் வெளிவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. முன்னதாக சுஷ்மாவை பார்க்க மத்திய அமைச்சர்கள் ஹர்சவர்தன் ஸ்மிருதி இரானி, நிதின் கட்காரி, ராஜ்நாத் சிங் , மற்றும் பா.ஜ. மூத்த தலைவர்கள் பலரும் எய்ம்ஸ் மருத்துவமனை வந்தனர்.

சுஷ்மா மறைவு குறித்த தகவல் அறிந்த பிரதமர் மோடி எய்ம்ஸ் விரைந்துள்ளார்.