புதுடில்லி: காஷ்மீரில் 10% இடஒதுக்கீடு, மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாக்கள் ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டன.

ராஜ்யசபாவில் காஷ்மீர் தொடர்பான மசோதாக்கள் மீது விவாதம் நடந்தது. எதிர்கட்சிகளின் விமர்சனங்களுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளித்தபின் மசோதாக்கள் மீது ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. பிரதமர் மோடியும் ராஜ்யசபாவுக்கு வருகை தந்தார்.
நிறைவேறிய மசோதாக்கள்:
* முதலில் காஷ்மீரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு மசோதா, ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

* மறுசீரமைப்பதற்காக, காஷ்மீரை யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதா மீது ஓட்டெடுப்பு நடந்தது. இம்மசோதாவுக்கு ஆதரவாக 125 ஓட்டுகளும், எதிர்ப்பு தெரிவித்து 61 ஓட்டுகளும் விழுந்தன. இதனையடுத்து இம்மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது.

ஓட்டு மெஷினில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, பட்டன் அழுத்தி ஓட்டளிக்காமல், ஓட்டு சீட்டு முறையில் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டு இம்மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து நாளை (ஆக.,6) வரை ராஜ்யசபா ஒத்தி வைக்கப்பட்டது.
மோடி வாழ்த்து
ராஜ்யசபா ஒத்திவைக்கப்பட்டபின் மசோதாக்கள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதற்காக, அமித்ஷாவுக்கு பிரதமர் மோடி கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.