வேலுார் லோக்சபா தொகுதிக்கான ஓட்டுப்பதிவு, இன்று நடக்கிறது. இதற்காக, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வேலுார் லோக்சபா தொகுதி தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி சார்பில், புதிய நீதிக்கட்சி தலைவர், ஏ.சி.சண்முகம், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். தி.மு.க., வேட்பாளராக, அக்கட்சியின் பொருளாளர், துரைமுருகனின் மகன், கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். மொத்தம், 28 பேர் களத்தில் இருந்தாலும், அ.தி.மு.க., – தி.மு.க., இடையே தான் நேரடிப்போட்டி.

முதல்வர், இ.பி.எஸ்., – துணை முதல்வர், பன்னீர்செல்வம், தி.மு.க., தலைவர், ஸ்டாலின் உள்ளிட்டோர், பிரசாரம் செய்தனர். இரண்டு கட்சிகளின் நிர்வாகிகளும், தொகுதியில் முகாமிட்டு, தேர்தல் பணிகளை கவனித்தனர். இதனால், வெற்றி யாருக்கு கிடைக்கும் என, பெரிதாக விவாதமே நடந்து வருகிறது.
தொகுதியில், 14 லட்சத்து, 32 ஆயிரத்து, 555 வாக்காளர்கள் உள்ளனர். ஓட்டுப்பதிவு, இன்று காலை, 7:00 முதல், மாலை, 6:00 மணி வரை நடக்க உள்ளது. மக்கள் அச்சமின்றி ஓட்டளிப்பதற்கு வசதியாக, விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தமுள்ள, 1,563 ஓட்டுச் சாவடிகளில், 850 இடங்களில், வெப் கேமரா வாயிலாக கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பாதுகாப்பு பணியில், 20 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் ஈடுபட உள்ளனர். வாக்காளர்கள் அனைவரும் ஓட்டளிக்க வசதியாக, வேலுார் மாவட்டத்திற்கு, பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மாலை, 6:00 மணிக்குள்ஓட்டுப்பதிவு மையத்திற்கு வருபவர்களுக்கு, டோக்கன் வழங்கி ஓட்டளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கை, வரும், 9ம்தேதி நடக்க உள்ளது.
* ஓட்டு இல்லாத வேட்பாளர்கள்தி.மு.க., வேட்பாளர், கதிர் ஆனந்த், காட்பாடியைச் சேர்ந்தவர். அரக்கோணம் லோக்சபா தொகுதிக்குள் வரும் அங்கு, கடந்த முறை, ஓட்டு போட்டு விட்டார். அதேபோல, அ.தி.மு.க., வேட்பாளர் சண்முகத்தின், சொந்த ஊர், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் உள்ளது. கடந்த முறை, ஆரணி லோக்சபா தொகுதியில், அவர் ஓட்டு போட்டு விட்டார்.
* ரூ.7.51 கோடிக்கு மது விற்பனை
வேலுாரில், நேற்று முன்தினம் முதல், இன்று வரை, ‘டாஸ்மாக்’ கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், ‘குடி’மகன்கள், 2ம் தேதியே, மாவட்டம் முழுவதும் உள்ள, 234 டாஸ்மாக் கடைகளில், 12 ஆயிரத்து, 750 கேஸ் மதுபானங்கள், 40 ஆயிரத்து, 205 கேஸ் பீர்கள் வாங்கி பதுக்கி விட்டனர். இதன் மதிப்பு, 7 கோடியே, 51 லட்சம் ரூபாய்.
வழக்கமாக, தினமும், 2.50 கோடி ரூபாய்க்கு மது பானங்கள் விற்பனையாகும். தேர்தலுக்காக, வழக்கத்தை விட இரு மடங்கு விற்பனையானதாக, டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.