பசோ: அமெரிக்காவின் டெக்ஸாஸ்சில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் ஷாப்பிங் மாலில் இருந்த பொதுமக்கள் 20 பேர் பலியாகினர். 40 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

டெக்சாஸ் மாகாணத்தில் எல் பாசோ என்ற இடத்தில் வால்மார்ட் எனப்படும் வணிக வளாகம் உள்ளது. இங்கு துப்பாக்கியுடன் புகுந்த மர்ம மனிதன் கண்ணில் பட்டவர்கள் மீது சரமாரியாக சுட்டார். இதில் 20 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். 40-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
சுட்டது எத்தனை பேர் என மர்மம் ?
துப்பாக்கியால் சுட்டது ஒருவன் மட்டுமிருக்காது இரண்டு மூன்று பேர் சேர்ந்து இதனை நடத்தியிருக்கலாம் எனவும் ஒருவனை பிடித்துள்ளதாகவும். போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச்சூடு நடந்த ஷாப்பிங் மாலை சுற்றிலும் போலீசார் தங்களது கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

21 வயது கொண்ட ஒரு நபரை போலீசார் பிடித்துள்ளதாகவும், அவனது பெயர் பேட்ரிக்குரிஷியஸ் என்றும் கூறப்படுகிறது. டல்லாஸ் பகுதியில் இருந்து இந்த நபர் வந்ததாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
அதிபர் டிரம்ப் கண்டனம்
அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இன்றைய துப்பாக்கிச்சூட்டால் டெக்ஸாசில் மக்களுக்கு மட்டும் துயரத்தை தரவில்லை. நாங்களும் இந்த துயருடன் இணைந்து பங்கேற்கிறோம். துப்பாக்கிச்சூடு ஒரு கோழைத்தனம். அப்பாவி மக்களை கொல்வதற்கு எந்த காரணம் கூறினாலும் ஏற்க முடியாது. இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.
மாகாண கவர்னர் கிரக் அப்போட் கூறுகையில்; இது வரலாற்றில் நடந்த ஒரு கொடும் செயல் ஆகும் என கண்டித்துள்ளார்.