முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்குவதோடு, அவரது சிலையை, பார்லிமென்ட்டில் நிறுவ, மத்திய அரசு முன்வர வேண்டும்’ என, தி.மு.க., கோரிக்கை வைத்துள்ளது.

லோக்சபாவில், தர்மபுரி எம்.பி., செந்தில்குமார், நேற்று(ஆக.,02) பேசியதாவது: பட்ஜெட் கூட்டத்தொடர், ஏற்கனவே திட்டமிட்ட தேதியில் முடிக்கப்படாமல், கால நீட்டிப்பு செய்து, நடைபெற்று வருகிறது. முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவதற்காகவே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என, மத்திய அரசு கூறுகிறது. ஆனால், பிரச்னைக்குரிய மசோதாக்களை தாக்கல் செய்து, அவற்றை அவசர அவசரமாக நிறைவேற்றுவதை, மக்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஜாலியன்வாலா பாக் நினைவு அறக்கட்டளை அமைப்பில், பல ஆண்டுகளாக, காங்கிரஸ் தலைவருக்கு அளிக்கப்பட்டு வந்த பிரதிநிதித்துவத்தை ரத்து செய்யும் மசோதாவை, அரசு கொண்டு வருகிறது. இதுதான் முக்கியமா? இதற்காகத்தான், கூட்டத் தொடரை நீட்டித்தீர்களா? பெரும்பான்மை பலம் இருப்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாமா? பெண்கள், குழந்தைகள், ஏழைகள் மற்றும் நலிவுற்ற சமூகத்தினருக்கு, பார்லிமென்ட் என்ன நன்மை செய்யப்போகிறது என, மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், அந்த பெருந்தன்மை அரசிடம் இல்லை.

ஜாலியன் வாலாபாக் சம்பவத்திற்காக, ஜெனரல் டயர் மீது விசாரணை நடைபெற்றது. ஆனால், தூத்துக்குடியில், ஒரு இளம்பெண் உட்பட, 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு, உருப்படியாக ஒரு விசாரணையும் இல்லையே. முன்னாள், தமிழக முதல்வர், கருணாநிதிக்கு, ‘பாரத் ரத்னா’ விருது வழங்க வேண்டும். பார்லிமென்ட் வளாகத்தில், கருணாநிதியின் முழு உருவச்சிலையை நிறுவிட, மத்திய அரசு முன் வர வேண்டும். இவ்வாறு, செந்தில் குமார் பேசினார்.