புதுடில்லி: தேசிய மாநாட்டுக் கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான, பரூக் அப்துல்லா தலைமையிலான குழுவினர், பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்தனர். ‘ஆண்டு இறுதிக்குள் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடத்த வேண்டும்’ என, அவர்கள் வலியுறுத்தினர்.ஜம்மு – காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி நடக்கிறது. இங்கே, பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, சமீபத்தில், 10 ஆயிரம் துணை ராணுவப் படையினர் அனுப்பப்பட்டனர்.
நடவடிக்கை

மேலும், மாநிலத்துக்கு சிறப்பு சலுகை அளிக்கும், அரசியல் சாசனத்தின், 35ஏ மற்றும், 370வது பிரிவுகள் நீக்கப்படலாம் என்றும் பரவலாக பேசப்படுகிறது.இந்நிலையில், முன்னாள் முதல்வர், பரூக் அப்துல்லா தலைமையிலான, தேசிய மாநாட்டுக் கட்சி குழுவினர், பிரதமர்நரேந்திர மோடியை, டில்லியில் நேற்று சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு குறித்து, பரூக் அப்துல்லாவின் மகனும், முன்னாள் முதல்வருமான, ஒமர் அப்துல்லா கூறியதாவது:பிரதமரிடம், இரண்டு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதித்தோம். மாநில சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும்.தற்போது மாநிலத்தில் உள்ள நிலைமை மோசமாகும் வகையில், எந்த நடவடிக்கையையும் எடுக்கக் கூடாது என, அவரிடம் வலியுறுத்தினோம்.
சந்திப்பு
அதாவது, 35ஏ மற்றும் 370வது பிரிவை நீக்கக் கூடாது என நேரடியாக வலியுறுத்தவில்லை. ஓராண்டுக்கு முன் இருந்ததைவிட, தற்போது மாநிலத்தின் நிலைமை மேம்பட்டுள்ளது. அது எப்போது வேண்டுமானாலும், மோசமாகும் நிலை உள்ளது. அதனால், நிலைமையை மோசமாக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று அவரிடம் வலியுறுத்தினோம்.யாருடைய ஆட்சி அமைய வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்யட்டும். அவர்களுடைய எந்த தீர்ப்பையும் ஏற்க, நாங்கள் தயாராக உள்ளோம்.மாநிலத்தின் நிலைமை குறித்து, தன்னுடைய கருத்தை பிரதமர் தெரிவித்தார். அது குறித்து, தற்போது கூற முடியாது. மொத்தத்தில் இந்த சந்திப்பு நிறைவாக இருந்தது.இவ்வாறு, அவர் கூறினார்.