புதுடில்லி: பார்லி.,யில் விவாதங்களின்றி மசோதாக்களை நிறைவேற்றி கொண்டே போகின்றனர்; நாம் என்ன ‘பீட்சா’வா விற்கிறோம் என திரிணமுல் காங்., கட்சியின் டெரெக் ஓ பிரெய்ன் தெரிவித்தார்.

‘பார்லிமென்டில் பல்வேறு மசோதாக்கள் முறையான விவாதங்கள் இல்லாமல் பார்லி. குழுக்களின் பரிசீலனைக்கு செல்லாமல் நிறைவேற்றப்படுகின்றன’ என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில் இப்பிரச்னை குறித்து திரிணமுல் காங்.,கைச் சேர்ந்த டெரெக் ஓ பிரெய்ன் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: பார்லிமென்டில் மசோதாக்கள் குறித்து விவாதித்து முடிவெடுக்க வேண்டும். ஆனால் தற்போது எந்த விவாதமும் இல்லாமல் மசோதாக்கள் நிறைவேற்றப்படுகின்றன. தொடர்ந்து மசோதாக்களை நிறைவேற்றிக் கொண்டே போகின்றனர். 3 நாட்களில் 3 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நாம் என்ன ‘பீட்சா’வா விற்கிறோம்.

கடந்த 2004 – 2009ல் 60 சதவீத மசோதாக்கள் மீது விவாதம் நடந்தது. 2009 – 2014ல் 71 சதவீத மசோதாக்கள் மீது விவாதம் நடந்தது. ஆனால் பா.ஜ. ஆட்சி அமைந்த 2014 – 19ல் 26 சதவீதம்; தற்போதைய லோக்சபா காலத்தில் 5 சதவீத மசோதாக்கள் மட்டுமே விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.