லக்னோ: 2024ல் இந்தியாவை 3வது மிகப்பெரிய பொருளாதார நாடாக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

உ.பி.,யில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய அமித் ஷா பேசியதாவது: உலக பொருளாதாரத்தில் 11வது இடத்திலிருந்த இந்தியாவை, கடந்த 5 ஆண்டுகளுக்குள் 5வது இடத்திற்கு பிரதமர் மோடி முன்னேற்றி உள்ளார். 2024ம் ஆண்டு உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை உயர்த்த, மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்த தேவையான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.


உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். சட்டம் ஒழுங்கு பிரச்னையில் மாற்றங்களை கொண்டு வந்து, முதலீட்டாளர்களுக்கு இருந்த தடையை நீக்கி உள்ளார். அதிக வேலைவாய்ப்பை வழங்கும் மாநிலமாகவும், அதிக பொருளாதாரம் கொண்ட மாநிலமாகவும் உ.பி., உருவாகும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார்.