பாட்னா : பீஹார், அசாம் மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதுவரை, 204 பேர் பலியாகியுள்ளனர்; ஒரு கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.


அண்டை நாடான, நேபாளத்தில், கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், நேபாள எல்லையில் அமைந்துள்ள, நம் நாட்டின் பீஹார் மாநிலத்தில், முக்கிய நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் அபாய அளவை தாண்டி ஓடுவதால், 12 மாவட்டங்கள், தண்ணீரில் மூழ்கியுள்ளன. இங்கு, 80 லட்சத்துக்கும் அதிகமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை, 123 பேர் பலியாகியுள்ளனர். தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை, பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றும் பணியில், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் பீஹார் மாநில போலீசார் ஈடுபட்டுள்ளனர். பீஹாரின் தர்பங்கா மாவட்டத்தில், வெள்ளத்தில், ‘டிக் டாக், வீடியோ’ எடுத்தபோது பலியான இளைஞரின் உடல், நேற்று மீட்கப்பட்டது.

வட கிழக்கு மாநிலமான அசாமிலும், கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை, 81 ஆக அதிகரித்துள்ளது. 17 மாவட்டங்களை சேர்ந்த, 20 லட்சம் பேர், பாதிக்கப்பட்டு உள்ளனர். சில மாவட்டங்களில் மீட்பு பணிகளை மேற்கொள்ள முடியாத அளவுக்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, நிவாரண பணிகளை மேற்கொள்ள, மத்திய அரசு, அதிக நிதி ஒதுக்க வேண்டும் என, அசாம், பீஹார் மாநில அரசுகள் வலியுறுத்தி உள்ளன.

மேலும் அசாமில் வெள்ளம் ஏற்பட்டபோது சீனா தான் முதலில் செயற்கைக்கோள் புகைப்படங்களைத் தந்து உதவியதாக இந்தியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரிகள் கூறுகையில், ” பல்வேறு நாடுகளும் செயற்கைக்கோள்களை ஏவினாலும், இயற்கைச் சீற்றத்தின் போது எந்த இடத்தில் அதிக பாதிப்பு, எங்கு அதிக உதவி தேவைப்படுகிறது என்பதை அறிய அந்தந்த குறிப்பிட்ட இடத்துக்கு மேல் இருக்கும் செயற்கைக் கோள்களே புகைப்படம் எடுக்க முடியும். அசாமில் கடந்த 17-ம் தேதி வெள்ளம் ஏற்பட்டபோது இஸ்ரோவின் கோரிக்கையை ஏற்று சீனாதான் முதன் முதலில் தனது கேவோபென் 2 செயற்கைக் கோள் பதிவு செய்த அசாமின் வெள்ள பாதிப்பு புகைப்படங்களை இந்தியாவுக்கு அனுப்பியது.

இந்தியாவின், கார்டோ சாட் 1 செயற்கைக் கோள் 18-ம் தேதியே அவ்வழியே கடந்ததால் அது மறுநாளே புகைப்படம் அனுப்பியது. சீனா மட்டுமின்றி கொரியா, கனடா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளும் செயற்கைக்கோள் புகைப்படங்களை அனுப்பியுள்ளன,” என்று தெரிவித்துள்ளனர்.