புதுடில்லி,:’பார்லிமென்ட் குழுக்களின் ஆய்வுக்கு அனுப்பாமல், மசோதாக்கள் நேரடியாக நிறைவேற்றப்படுகின்றன’ என தெரிவித்து, 17 எதிர்க்கட்சிகள், ராஜ்யசபா தலைவருக்கு, கண்டன கடிதம் எழுதிஉள்ளன.காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணமுல் காங்கிரஸ், தெலுங்கு தேசம் உள்ளிட்ட, 17 கட்சிகளின் தலைவர்கள், ராஜ்யசபா தலைவர், வெங்கையா நாயுடுவுக்கு நேற்று எழுதிய கடிதத்தில் தெரிவித்து உள்ளதாவது:சட்டத் திருத்தங்களையும், புதிய மசோதாக்களையும், பார்லிமென்ட் குழுக்களுக்கு அனுப்பி, பரிசீலனை செய்யாமல், நேரடியாக நிறைவேற்றும் போக்கை, மத்திய அரசு கடைபிடிக்கிறது.
இது, பார்லிமென்ட் நடைமுறைகளுக்கு எதிரானது; சட்டங்கள் இயற்றப்படும் அடிப்படைகளுக்கு முரணானது.கடந்த, 14 வது லோக்சபாவில், 60சதவீத மசோதாக்கள், பார்லிமென்ட் குழுக்களுக்கு அனுப்பப்பட்டன. 15 வது லோக்சபாவில், 71 சதவீத மசோதாக்கள் அனுப்பப்பட்டன. ஆனால், 16 வது லோக்சபாவில், 26 சதவீத மசோதாக்கள் தான், பரிசீலனைக்கு அனுப்பப்பட்டன.நடப்பு லோக்சபாவில், 14 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று கூட, பார்லிமென்ட் நிலைக்குழு அல்லது பார்லிமென்ட் குழுக்களுக்கு அனுப்பப்படவில்லை. இந்நிலையை, மத்திய அரசு மாற்றிக் கொள்ள வேண்டும்; இந்த விவகாரத்தில், ராஜ்யசபா தலைவர் தலையிட வேண்டும்.இவ்வாறு, அந்த கடிதத்தில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.