திருவனந்தபுரம் : நாட்டிலேயே முதலாவதாக, ‘இஸ்ரோ’வுடன் இணைந்து, திருவனந்தபுரத்தில் விண்வெளி பூங்கா அமைக்க, கேரளா அரசு திட்டமிட்டுள்ளது.

திருவனந்தபுரத்தில், ‘இஸ்ரோ’வின் முக்கிய மையமான விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் (வி.எஸ்.எஸ்.சி.,) உள்ளது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இங்கு முதன்மை விஞ்ஞானியாக பணியாற்றியவர். வி.எஸ்.எஸ்.சி., நிதியுதவியுடன் திருவனந்தபுரத்தில் விண்வெளி பூங்கா அமைக்க இருப்பதாக, கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, திருவனந்தபுரத்தில், 100 ஏக்கர் பரப்பளவில் அறிவு நகரம் (நாலேட்ஜ் சிட்டி) அமைக்கும் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. அதில், 20 ஏக்கர் நிலத்தில்,நாட்டிலேயே முதலாவதாக விண்வெளி பூங்கா அமைக்கப்படுகிறது.

இந்த விண்வெளி பூங்காவில், டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அறிவு மையம், விண்வெளி அருங்காட்சியகம் மற்றும் விண்வெளி சார்ந்த தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணு துறை செயலர் சிவசங்கர் கூறுகையில், ”விண்வெளி பூங்கா திட்டப்பணிகள் நிறைவேறும்போது, நாட்டின் விண்வெளி தொழில்நுட்பத்தில் கேரளா முக்கிய பங்கு வகிக்கும். இத்துறையில் பல வேலைவாய்ப்புகள் உருவாகும்,” என்றார்.