காங்கிரஸ் கட்சியின் மிக மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த ஷீலா தீட்சித் 1998-ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை டெல்லி முதல்வராக 15 ஆண்டுகள் பதவி வகித்தவர் . முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தி தலைமையிலான மத்திய மந்திரி சபையில் இணை மந்திரியாகவும் பொறுப்பு வகித்தார்.
உடல் நலக்குறைவால் சில நாட்களுக்கு முன்னர் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிப்பட்ட ஷீலா தீட்சித்(81) இன்று மாலை 3.55 மணியளவில் மாரடைப்பால் காலமானார்.

டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ஷீலா தீட்சித் உடலுக்கு முக்கிய பிரமுகர்களும் பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி இன்றிரவு ஷீலா தீட்சித் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் அக்கட்சியின் முக்கிய தலைவர்கள், டெல்லி பாஜக தலைவர் விஜய் கோயல், பாராளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.