Select Page

City Union BankShare this page

பெங்களூரு:கர்நாடக சட்டசபையில் காங்கிரஸ் ம.ஜ.த.- எம்.எல்.ஏ.க்களின் கூச்சல் குழப்பத்தால் முதல்வர் குமாரசாமி கொண்டு வந்த நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பு நடத்தப்படவில்லை. இன்று காலை வரை சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் பா.ஜ. – எம்.எல்.ஏ.க்கள் வெளி யேறாமல் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

 நம்பிக்கை, ஓட்டுக்கு,முன் ,கர்நாடக, சட்டசபை, ஒத்திவைப்பு

இன்று பகல் 1:30 மணிக்குள் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தி முடிக்க வேண்டும் என முதல்வர் குமாரசாமிக்கு கவர்னர் உத்தரவிட்டுள்ளார். இதனால் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசின் நிலை இன்று முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் 16 எம்.எல்.ஏ.க் கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததால் மாநிலத்தில் அசாதாரண அரசியல் சூழ்நிலை நிலவி வருகிறது.

சபாநாயகர் அறிவித்தபடி கர்நாடக சட்டசபை நேற்று பகல் 11:15 மணிக்கு கூடியது. தன் அரசின் மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல்வர் குமாரசாமி தாக்கல் செய்து பேசிய போது சட்டசபை காங்கிரஸ் குழு தலைவர் சித்தராமையா குறுக்கிட்டு முக்கிய விஷயம் குறித்து பேச வேண்டுமென கூறினார்.

சித்தராமையா பேசியதாவது: ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்களை சட்டசபை நிகழ்ச்சிகளுக்கு வரும்படி கட்டாயப்படுத்த கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவர்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்கலாமா? அப்படி பிறப்பித்து அவர்கள் அதை மீறினால் கட்சி தாவல் தடை சட்டத்தின்

கீழ் நடவடிக்கை எடுக்க இயலுமா என்பதை சபாநாயகர் தெளிவுபடுத்த வேண்டும். உச்சநீதி மன்ற உத்தரவு மூலம் கட்சிகளின் உரிமை பறிக்கப்படுகிறது.என் எம்.எல்.ஏ.க்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிப்பது என் தலையாய உரிமை. இந்த சட்ட சிக்கலுக்கு தீர்வு காணும் வரை நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தக் கூடாது.இவ்வாறு அவர்பேசினார்.

இதற்கு பா.ஜ. தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டது. ‘நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வந்த பின் மற்ற விஷயங்கள் குறித்து பேச அனுமதிப்பது சரியா’ என அக்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். முதலில் ஓட்டெடுப்பு நடத்தும் படி அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். இதை பொருட்படுத்தாத காங்கிரசார் ‘எங்களுக்கு எழுந்து உள்ள சட்ட சிக்கல்களை முதலில் தீர்த்து வையுங்கள்’ என கூறினர்.

இதற்கிடையில் ஓட்டெடுப்பு நடத்துவதில் கால விரயம் செய்வதாக கூறி கவர்னர் வஜுபாய் வாலாவை முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையில் பா.ஜ.வினர் சந்தித்து மனு கொடுத்தனர்.கவர்னரும் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது இன்றே (நேற்றே) ஓட்டெடுப்பு நடத்த சபாநாயகர் ரமேஷ்குமாருக்கு அவசர கடிதம் எழுதி அனுப்பினார்.இந்த கடிதத்தை சட்டசபையில் தாக்கல் செய்த போது காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஸ்ரீமந்த் பாட்டீல் மும்பைக்கு சென்றது குறித்து வாக்கு வாதம் ஏற்பட்டது. பா.ஜ.வினர் கடத்திச் சென்றதாக காங்கிரசார்குற்றஞ்சாட்டினர்.

இச்சம்பவம் குறித்து அவரே மும்பைக்கு சென்றாரா அல்லது வேறு யாராவது கட்டாயபடுத்தி சென்றாரா என்பது பற்றி அவரது குடும்பத்தினரிடம் விசாரித்து நாளை (இன்று) அறிக்கை தாக்கல் செய்யும்படி உள்துறை அமைச்சர் பாட்டீலுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.ஒரு கட்டத்தில் நம்பிக்கை ஓட்டெடுப்பு உடனடியாக நடத்த வேண்டுமென பா.ஜ. தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.

அப்போது கடும் கோபமடைந்த சபாநாயகர்

Advertisement

”எனக்கு உத்தரவு போட யாருக்கும் அதிகார மில்லை” என தொடர்ந்து மூன்று முறை உரக்க சொன்னார். யாரும் கேட்காததால் சபையில் இருந்து வெளியேறினார்.அதை தொடர்ந்து சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த துணை சபாநாயகர் கிருஷ்ணாரெட்டி அமைதி ஏற்படுத்த முயன்றார். காங்கிரஸ் ம.ஜ.த.வினர் போராட்டம் தொடர்ந்ததால் இன்று காலை 11:00 மணி வரை சட்டசபை ஒத்திவைக்கப்பட்டதாக அறிவித்தார்.

நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தப்படாததைக் கண்டித்து எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா தலைமையில் பா.ஜ.வினர் சட்டசபையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித் தனர். இதற்கிடையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி கொறடா உத்தரவை மீறினால் கட்சி தாவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க இயலுமா என்பது குறித்து கர்நாடக அட்வகேட் ஜெனரல் உதய்ஹொல்லாவுடன் சபாநாயகர் ரமேஷ்குமார் ஆலோசனை நடத்தினார்.

சட்டசபையில் நேற்று நடந்த அனைத்து நிகழ்வுகளையும் கவனிக்க கவர்னரின் பிரதிநிதியாக அவரது செயலர் ரமேஷ் வந்து இருந்தார்.அவர் நேற்றிரவு கவர்னருக்கு அறிக்கை தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து இன்று பகல் 1:30 மணிக்குள் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தி முடிக்க முதல்வர் குமாரசாமிக்கு கவர்னர் வஜுபாய் வாலா உத்தரவிட்டார்.


Share this page