Select Page

City Union Bank



Share this page

புதுடில்லி : சாலை விபத்தில் உயிர் இழப்பவர்களுக்கு, 5 லட்சம் ரூபாயும், படுகாயம் அடைபவர்களுக்கு, 2.5 லட்சம் ரூபாயும் இழப்பீடு வழங்க வழிவகை செய்யும் சட்ட திருத்த மசோதா, லோக்சபாவில் நேற்று, தாக்கல் செய்யப்பட்டது.

 

 

சட்ட திருத்தம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசின் முந்தைய ஆட்சியில், மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா, லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், ராஜ்யசபாவின் ஒப்புதலை பெறவில்லை. இந்நிலையில், இந்த சட்ட திருத்த மசோதாவை, மத்திய சாலை போக்குவரத்து துறை இணை அமைச்சர், வி.கே.சிங், லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்தார்.

 

அப்போது, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர், நிதின் கட்கரி கூறியதாவது: சாலை விபத்துகளில் சிக்கி உயிர் இழப்பவர்களின் குடும்பங்களுக்கு வழங்கும் இழப்பீடுகளை அதிகரிக்கவும், படுகாயம் அடைபவர்களுக்கு, பாதுகாப்பு வழங்கவும், இந்த சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

நிவாரணம்

இதன்படி, உயிரிழப்பவர்களின் குடும்பங்களுக்கு, 5 லட்சம் ரூபாயும், படுகாயம் அடைபவர்களுக்கு, 2.5 லட்சம் ரூபாயும் இழப்பீடு வழங்க, இம்மசோதா வழி செய்யும். மேலும், போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகையை உயர்த்துவதன் மூலம், விபத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கு, தகுந்த இழப்பீடுகளை உயர்த்தி வழங்க முடியும். இந்த சட்ட திருத்தம், எக்காரணத்தை கொண்டும், மாநில அரசுகளின் உரிமைகளையும், அதிகாரத்தையும் பறிக்காது.

 

மாறாக, சாலை விபத்துகளில், உயிரிழப்புகளின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்க உதவும். கடந்த ஆட்சி காலத்தில், மாநில போக்குவரத்து துறை அமைச்சர்களின் கருத்துகளையும் கேட்டு, அதன் அடிப்படையில், இந்த சட்ட திருத்த மசோதா உருவாக்கப்பட்டது. இவ்வாறு, அவர் கூறினார்.


Share this page