Select Page

City Union Bank



Share this page

புதுடில்லி: பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, கல்வி மற்றும் வேலை வாய்ப்பில், 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்துள்ள நிலையில், மற்ற பிரிவினரைப் போல, இந்தப் பிரிவினருக்கும், வயது உச்ச வரம்பில் விலக்கு அளிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில், 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கொண்டு வந்துள்ளது.

இந்நிலையில், எஸ்.சி., – எஸ்.டி., பிரிவினர் மற்றும் ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு, அரசுப் பணியில் சேருவதற்கு, வயது உச்ச வரம்பில் விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த சலுகையை, பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கும் அளிக்க, அரசு முடிவு செய்துள்ளது.இது தொடர்பாக, மத்திய பணியாளர் நலத் துறை அமைச்சர், ஜிதேந்திர சிங்குக்கு, சமூக நீதித் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:அரசுப் பணிகளில், எஸ்.சி., – எஸ்.டி., பிரிவினர் மற்றும் இதர பிற்படுத்தப் பிரிவினருக்கு வயது உச்ச வரம்பில் சலுகை அளிக்கப்படுகிறது. பல்வேறு தரப்பினருடன் நடத்திய ஆலோசனையின்படி, பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கும், இந்த சலுகை அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு அதிக பலன் கிடைக்கும். இது குறித்து ஆராய்ந்து, தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு, அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.தற்போதைய விதிகளின்படி, அரசுப் பணிகளில் சேருவதற்கு, ஓ.பி.சி., பிரிவினருக்கு, மூன்று ஆண்டுகளும், எஸ்.சி., – எஸ்.டி., பிரிவினருக்கு, ஐந்து ஆண்டுகளும் சலுகை அளிக்கப்படுகிறது.பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு, மற்ற பிரிவினருக்கு வழங்குவதுபோல், மதிப்பெண் சலுகை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.


Share this page