சென்னை -மத்திய அரசின், ‘டிஜிட்டல் இந்தியா’ நான்காம் ஆண்டு விழா கொண்டாட்டம், தி.நகர் தலைமை அஞ்சலகத்தில், நேற்று நடந்தது.அஞ்சல் துறையின் மின்னணு சேவைகள் குறித்து, சென்னை, மத்திய கோட்டத்தின் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர், அலோக் ஓஜா, துணை கண்காணிப்பாளர், ஜெயந்தி முரளி ஆகியோர், பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது:அஞ்சல் துறை டிஜிட்டல் மயமாக்கப்பட்டதால், குக்கிராம மக்கள் பயனடைந்து வருகின்றனர். குறிப்பாக, இ- – மணியார்டர், ஆதார் பதிவு, புதுப்பித்தல், அஞ்சல் வங்கி சேவை, குக்கிராமங்களில், அஞ்சல் கூரியர் சேவை, வெளிநாடுகளுக்கான பார்சல் ஏற்றுமதி, இறக்குமதி, வாடிக்கையாளர்கள் வரவேற்பை பெற்றுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில், ஏழுமலையான் தரிசன முன்பதிவிற்கு, தினமும் குறிப்பிட்ட டிக்கெட்கள், 2014ம் ஆண்டு முதல் ஒதுக்கி வருகிறது. இதை, அஞ்சல் துறை மூலம், முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.ஒரு நபர், ஐந்து டிக்கெட்கள் வரை முன்பதிவு செய்யலாம். இதற்காக, தி.நகர், மயிலாப்பூரில், தனி கவுன்டர்கள் இயங்குகின்றன. உரிய ஆவணங்களை காண்பித்து, முன்பதிவு செய்யலாம் என்றார்.