காங்., கட்சியை சேர்ந்த அனந்த் சிங் மற்றும் ரமேஷ் ஜர்கிகோலி ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். அனந்த் சிங் தனது ராஜினாமா கடிதத்தை கவர்னரை நேரில் சந்தித்து அளித்துள்ளார். ரமேஷ் ஜர்கிகோலி தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ரமேஷ் குமாரிடம் அளித்துள்ளார்.
மேலும் சில காங்., எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா செய்ய உள்ளதாக அனந்த் சிங் கூறி உள்ளது காங்., தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த ஆண்டு துவக்கத்தில் சொகுசு விடுதியில் காங்., எம்எல்ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டிருந்த போது அனந்த் சிங், மற்றொரு காங்., எம்எல்ஏ.,வால் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதற்கு பிறகு காங்., கட்சிக்குள் சலசலப்பு இருந்து வந்ததே தற்போது எம்எல்ஏ.,க்களின் ராஜினாமாவிற்கு காரணமாக கூறப்படுகிறது.

கர்நாடகா முதல்வர் குமாரசாமி தற்போது அமெரிக்கா சென்றுள்ளார். இந்நிலையில் காங்., எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா செய்துள்ளது ஆளும் காங்- மஜத கூட்டணி அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையில் காங்., எம்எல்ஏ.,க்களின் செயல்பாடுகளை உற்று கவனித்து வருவதாக கர்நாடகா பா.ஜ., தெரிவித்துள்ளது. கர்நாடகா பா.ஜ., தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா கூறுகையில், அனந்த் சிங்கின் ராஜினாமா பற்றி மீடியாக்கள் மூலம் தெரிந்து கொண்டேன். அரசை கவிழ்க்க நாங்கள் விரும்பவில்லை. ஒருவேளை அரசு தானாக கவிழ்ந்தால், புதிய ஆட்சி அமைப்பதற்கான சாத்தியகூறுகளை நாங்கள் கையில் எடுப்போம். ஆனால் மீண்டும் தேர்தல் என்ற பேச்சிற்கே இடமில்லை என்றார்.