புதுச்சேரி கவர்னர் குற்றச்சாட்டு
புதுச்சேரி:’இந்தியாவின் பெரிய நகரங்களில் ஒன்றான, சென்னை வறட்சிக்கு, மோசமான ஆட்சி நிர்வாகமே காரணம்’ என, புதுச்சேரி கவர்னர், கிரண்பேடி குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தின் தலைநகரான சென்னை, தற்போது, கடும் வறட்சியில் சிக்கியுள்ளது. குடிநீர் கிடைக்காமல், மக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணம் குறித்து, ஹாலிவுட் நடிகர் முதல், பல்வேறு தரப்பினரும், தங்களின் கருத்துகளை பகிர்ந்து
வருகின்றனர்.அந்த வகையில், சென்னை வறட்சிக்கான காரணம் குறித்து, புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி, சமூக வலைதளத்தில், வெளியிட்டு உள்ள பதிவு:
இந்தியாவின் ஆறாவது பெரிய நகரமாக, சென்னை உள்ளது. தற்போது, வறட்சியில், முதல்நகரமாக மாறியுள்ளது. இதே நகரம், நான்கு ஆண்டுகளுக்கு முன் பெய்த கடும் மழையால், வெள்ளத்தில் மூழ்கி, கடும் பாதிப்பை சந்தித்தது.தற்போதைய பிரச்னைக்கு, தமிழகத்தின் மோசமான ஆட்சி, ஊழல் அரசியல், அலட்சிய அதிகாரங்கள் ஆகியவையே காரணமாக உள்ளது. மக்களின் சுயநல எண்ணமும், கோழைத்தனம் கூட ஒரு காரணமாக கூறலாம்.
எனவே, புதுச்சேரியிலும் இதுபோன்ற ஒரு நிலை ஏற்படாமல் தடுக்க, மக்களின் நினைவுகளை
புதுப்பிக்க வேண்டும். பசுமை புதுச்சேரியாக மாற்ற, நாம் ஒன்றிணைந்து செய்த வேலையால், வறட்சியில் இருந்து, ஓரளவு காப்பாற்றப்பட்டுள்ளோம்.இந்த கூட்டு முயற்சி, அனைத்து இடங்களிலும், அனைத்து காலத் திலும் தேவை. நாம் தொடர்ந்து மேற் கொள்ளும் பசுமை புதுச்சேரி இயக்கம் மூலம், சென்னையை போன்று வறட்சி ஏற்படாமல், புதுச்சேரியை காப்பாற்ற உதவும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.