புதுடில்லி: அசாமில், முதல்வர், சர்பானந்த சோனவால் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு உள்ள விசாரணை முகாம்களில், இந்தியாவில் சட்டவிரோதமாக ஊடுருவிய ஏராளமானோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.அந்த முகாம்களில் காணப்படும் மோசமான சூழல் குறித்து, சமூக ஆர்வலர், ஹர்ஷ் மந்தர் சார்பில், மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண், உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்துஉள்ளார்.இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, அசாம் மாநில அரசு சார்பில் ஆஜரான, சொலிசிட்டர் ஜெனரல், துஷார் மேத்தா கூறியதாவது:

மாநில அரசு நடத்தி வரும், ஆறு விசாரணை முகாம்களில், 900 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அசாமில் ஊடுருவிய வெளிநாட்டவரை, அவர்களது நாடுகளுக்கு திருப்பி அனுப்ப, தக்க வழிமுறை வகுக்கப்பட வேண்டும்.கடந்த, 10 ஆண்டுகளில், 50 ஆயிரம் வெளிநாட்டவர், இந்தியாவுக்குள் ஊடுருவி வசித்து வருவதாக, வெளிநாட்டவர் தீர்ப்பாயங்கள் அறிவித்துள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:அசாமில் உள்ள வெளிநாட்டவர் தீர்ப்பாயங்களின் செயல்பாடுகளில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன. இவற்றின் செயல்பாடுகள் குறித்து, அசாம் அரசு,விரிவான தகவல்களுடன் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்.மேலும், அசாமில் செயல்படும் விசாரணை முகாம்களின் நிலை குறித்த தகவல்களையும், நீதிமன்றத்தில் அரசு தெரிவிக்க வேண்டும். இந்த வழக்கில், அசாம் மாநில தலைமை செயலர், நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என, நீதிமன்றம் வலியுறுத்தவில்லை.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.