புதுச்சேரி : புதுச்சேரி துணைநிலை கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக, முதல்வர் நாராயணசாமி இன்று(பிப்.,13) பிற்பகல் முதல், கவர்னர் மாளிகை முன் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார். இது சட்ட விரோதமானது என கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார்.

அறிவுரை
பிப்ரவரி 11 முதல் புதுச்சேரியில் ஹெட்மெட், சீட்பெல்ட் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டது.

புதுச்சேரி கவர்னர் மாளிகை முன்பு முதல்வர் நாராயணசாமி மறியல்
இந்நிலையில் பிப்.,11 காலை முதலே கிரண்பேடி நேரடியாக களத்தில் இறங்கி உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதா என கண்காணித்தார். சாலையில் நின்று, வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் அணிய அறிவுரை வழங்கினார். இதனைத் தொடர்ந்து அதிகாரிகளும் இன்று சிக்னலில் நின்று, ஹெல்மெட் அணிய அறிவுறுத்தினர்.

எதிர்ப்பு
இந்நிலையில் கட்டாய ஹெல்மெட் உத்தரவை உடனடியாக அமல்படுத்த முதல்வர் நாராயணசாமி எதிர்ப்பு தெரிவித்தார்.

போராட்டம்
துணைநிலை கவர்னரின் தலையீட்டால் அரசை நடத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதாக குற்றம்சாட்டிய நாராயணசாமி, கவர்னர் மாளிகை முன் அமைச்சர்களுடன் சென்று தர்ணா போராட்டம் நடத்தினார். நாராயணசாமி கருப்பு சட்டை அணிந்தும், அமைச்சர்கள் கழுத்தில் கருப்பு துண்டும் அணிந்து வந்தும் தர்ணா செய்தனர். அங்கேயே, முதல்வரும், அமைச்சர்களும் மதிய உணவு அருந்தினர். அலுவலக கோப்புகளிலும் கையெழுத்து போட்டனர்.

புதுச்சேரி கவர்னர் அலுவலகம் முன்பு முதல்வர் நாராயணசாமி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார். புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம் கலந்து கொண்டார்.
நிறுத்தி வைப்பு
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, புதுச்சேரி மக்களுக்கு கிரண்பேடி தொல்லை கொடுத்து வருகிறார். ஆசிரியர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட நியமனங்களை கிரண்பேடி நிறுத்தி வைத்து உள்ளார். நிலுவையில் உள்ள கோப்புகளுக்கும் ஒப்புதல் அளிக்கும் வரை தர்ணா தொடரும் என்றார். இதனால் கவர்னர் மாளிகையில் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி கவர்னர் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் சங்கு ஊதி ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாதுகாப்பு
இந்த போராட்டம் காரணமாக கவர்னர் மாளிகை முன்பு, துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

கடிதம்
இந்நிலையில், நாராயணசாமிக்கு, கவர்னர் கிரண்பேடி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், முதல்வர் நாராயணசாமியின் போராட்டம் சட்டத்திற்கு புறம்பானது. தங்களின் புகார்கள், கோரிக்கைகள் தொடர்பாக கடந்த 7ல் கடிதம் அளித்தார்கள். கடிதம் பற்றி பரிசீலிக்க போதிய அவகாசம் கூட தராமல், தர்ணாவில் ஈடுபடுவது சட்டத்திற்கு புறம்பானது. போராட்டம் குறித்து எனக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடவில்லை. 21ம் தேதி விவாதிக்க வாருங்கள். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

முதல்வர் நாராயணசாமி கோப்புகளில் கையெழுத்திட்டார்.
