புதுடில்லி : மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பொது பட்ஜெட் குறித்து பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அவை :பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர் நிதி அமைச்சர் பியுஷ் கோயல் கூறியதாவது:பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மூலம் மக்கள் மத்தியில் உற்சாகம் உருவாகும். அனைத்து தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்கு இந்த பட்ஜெட் உதவும். விவசாயிகள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் மேம்பாட்டிற்கு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
விவசாயிகளுக்கு இதுபோல், எந்த அரசும் சலுகை வழங்கியது இல்லை. இந்த பட்ஜெட்டால், 12 கோடி விவசாயிகள் பயன்பெறுவார்கள். விவசாயிகளுக்கு ரூ.6000 தொகையானது 2018 டிசம்பர் மாதத்தை முன்தேதியிட்டு வழங்கப்படும்.முந்தைய ஆட்சியில் திட்டங்கள் மட்டும் அறிவிக்கப்பட்டன. ஆனால், எதுவும் செயல்படுத்தப்படவில்லை.
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் வகையில் பென்சன் திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. வறட்சி காலங்களில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும். விவசாயிகளுக்கு அதிக கடன்களை மோடி அரசு வழங்கி உள்ளது. ஏசி அறையில்அமர்ந்துள்ள சிலருக்கு விவசாயிகளின் கவலை புரியாது. இதனால், தான் பிரதம மந்திரி கிசான் சமன் திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது வரலாற்று பூர்வமான முடிவாகும்.

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் : வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட். சமூகத்தின் அனைத்து தரப்பினரும் பயனடையும் வகையில் இந்த பட்ஜெட் உள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல்: மரியாதைக்குரிய பிரதமருக்கு, 5 ஆண்டுகள் உங்களின் தகுதியின்மை மற்றும் அகங்காரம், நமது விவசாயிகளின் வாழ்க்கையை அழித்துவிட்டது. அவர்களுக்கு ஒரு நாளுக்கு ரூ.17 தருவது என்பது, அவர்களையும், அவர்களது பணியையும் அவமானப்படுத்தும் செயல்.
அருண் ஜெட்லி கூறியதாவது: சிறப்பான பட்ஜெட் தாக்கல் செய்த பியுஷ் கோயலுக்கு வாழ்த்துகள். இந்த பட்ஜெட், வளர்ச்சி, விவசாயிகள், ஏழைகளுக்கு ஆதரவானது என்பதில் கேள்வியே இல்லை. இந்திய நடுத்தர வர்க்கத்தினர்,வாங்கும் சக்தியை பலப்படுத்தி உள்ளது.
பா.ஜ., தலைவர் அமித்ஷா: விவசாயிகள், தொழிலாளர்கள், நடுத்தர மக்களின் எதிர்பார்ப்புகளை பட்ஜெட் பூர்த்தி செய்துள்ளது. ரூ.75 ஆயிரம் கோடியில், பிரதமர் கிசான் சமன் நிதி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம், கடன் வாங்காத விவசாயிகளும் பயன்பெறுவார்கள்.

உபி., முதல்வர் யோகி ஆதித்யநாத் : விவசாயிகள், நடுத்தர மக்கள், ஏழைகள், பெண்கள் என சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கியதாக இந்த பட்ஜெட் உள்ளது. புதிய இந்தியா கனவை எட்டுவதற்கு இந்த பட்ஜெட் உதவிகரமாக இருக்கும்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் : போலியான புள்ளி விவரங்களை கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது. முத்ரா கடன் திட்டம் காரணமாக வாராக்கடன் அதிகரித்துள்ளது. இந்தி மற்றும் ஆங்கிலத்தில் அமைச்சர் பேச்சு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ஓட்டுக்காக தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட். விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட தொகை, ஓட்டுக்காக வழங்கப்பட்ட தொகை.
காங்., எம்.பி., சசிதரூர் : ஒட்டுமொத்தமாக பார்த்தால் மட்டமானது. ஆனால் நடுத்தர மக்களுக்கு வரிச்சலுகை வழங்கியுள்ளது நல்ல விஷயம். விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 நிதி என்றால் மாதத்திற்கு ரூ.500 ஆகும். ஒருவர் கவரவமாக, கண்ணியத்துடன் வாழ்வதற்கு மாதத்திற்கு ரூ.500 என்பது எப்படி போதுமானதாக இருக்கும்.

திமுக எம்.பி., கனிமொழி : மத்திய பட்ஜெட் என்பது குழந்தைகளுக்கு சொல்லக்கூடிய கதை போன்றது. எனினும் முடிவை சிறப்பாக முடிக்க வேண்டும் என மத்திய அரசு எண்ணுகிறது. ஆனால் காலம் கடந்து விட்டது.
தமிழக அமைச்சர் ஜெயக்குமார் : மத்திய பட்ஜெட்டில் மீன்வளத்துறைக்கு தனி அமைச்சரகம் அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கதக்கது.