புதுடில்லி: வருமான வரி விலக்கு உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டதன் மூலம் நடுத்தர மக்களின் கனவு நிறைவேற்றப்பட்டு உள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.

இடைக்கால பட்ஜெட் தொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பட்ஜெட் உள்ளது. வறுமை பெரும்பாலும் ஒழிக்கப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சி இதுவரை இல்லாத அளவுக்கு வேகமெடுத்து உள்ளது. தேர்தலுக்கு பிறகு இந்தியா மேலும் வளர்ச்சி பாதையை நோக்கி செல்லும். விவசாயிகள் மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் பயன்பெறுவார்கள்.

கடந்த அரசுகள், பல்வேறு காலங்களில் விவசாயிகளுக்கு பல திட்டங்களை அறிவித்தது. இதனால், 2 – 3 கோடி விவசாயிகள் மட்டுமே பயன்பெற்றனர். ஆனால், விவசாயிகளுக்கு தற்போது, அறிவிக்கப்பட்ட திட்டத்தால், 12 கோடி பேர் பயன்பெறுவார்கள். விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்குவது சுதந்திர இந்தியாவின் பெரிய திட்டம்.
வருமான வரி விலக்கு உச்சவரம்பு அதிகரிப்பு காரணமாக நடுத்தர மக்களுக்கு மிகப்பெரிய பரிசாக அமைந்து உள்ளது. நடுத்தர வர்க்கத்தினரின் கனவு பட்ஜெட்டில் நிறைவேற்றப்பட்டது. அவர்கள், இனி பலன்களை அறிவிப்பார்கள். அவர்களுக்கு வாழ்த்துகள். அமைப்பு சாரா தொழிலாளர்கள் குறித்து இதுவரை எந்த அரசும் கவலைப்பட்டது இல்லை. வரி செலுத்தும் அனைத்து தரப்பு மக்களுக்கும் நான் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். புதிய இந்தியாவுக்கான பட்ஜெட் ஆக உள்ளது.
தேர்தலுக்கு பின் மேற்கொள்ளப்பட உள்ள வளர்ச்சி திட்டங்களுக்கு முன்னோட்டமாக இடைக்கால பட்ஜெட் உள்ளது.ஆயுஸ்மான் பாரத் திட்டத்தின் மூலம 50 கோடி விவசாயிகள் பயன்பெறுவார்கள். ஆயுஸ்மான் பாரத், பிரதமர் மந்திரி யோஜனா திட்டங்கள் மூலம் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறுவார்கள். நாட்டின் கடைக்குடிமகனுக்கும் இந்த திட்டங்கள் சென்றடையும். ஒவ்வொரு குடிமகனும் வளர்ச்சியை நோக்கி செல்லும் திட்டங்கள் உள்ளன. இவ்வாறு பிரதமர் பேசினார்.