சென்னை : இசை அமைப்பாளர் இளையராஜா நிகழ்ச்சிக்கு, தடை விதிக்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
சினிமா பட தயாரிப்பாளர், சதீஷ்குமார் தாக்கல் செய்த மனு:தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், பிப்., 2, 3ம் தேதிகளில், ‘இளையராஜா 75’ என்ற நிகழ்ச்சி நடக்கிறது. சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்கும் போது இருந்த நிதியில், 7.53 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. பலமுறை கேட்டும், இரண்டு ஆண்டுகளுக்கான கணக்குகளை, நிர்வாகி கள் தாக்கல் செய்யவில்லை. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றாமல், இளையராஜா நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.

இந்த நிகழ்ச்சியை நடத்த, ஏழு கோடி ரூபாய், ‘டிபாசிட்’ செய்ய, உத்தரவிட வேண்டும். டிபாசிட் செய்யாமல், இசை நிகழ்ச்சி நடத்த, தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு தடை விதிக்க வேண்டும். ஓய்வுபெற்ற நீதிபதியை நியமித்து, பொதுக்குழுவை கூட்டி, தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, நீதிபதி, கே.கல்யாண சுந்தரம் முன் விசாரணைக்கு வந்தது. தயாரிப்பாளர்கள் சங்கம் தரப்பில், வழக்கறிஞர், ஆர்.கிருஷ்ணா, ”உறுப்பினர்களுக்கு வீடு கட்டி கொடுப்பதற்காக நிதி திரட்டவே, இசை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. ”இளையராஜாவுக்கு, முன்பணமாக, 25 லட்சம் ரூபாய்; சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., மைதானத்துக்காக, 35 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது,” என்றார்.

இதையடுத்து, இளைய ராஜா நிகழ்ச்சிக்கு தடை கோரிய மனுவை, நீதிபதி கல்யாணசுந்தரம், நேற்று தள்ளுபடி செய்தார். ‘கடைசி நேரத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது; குற்றச்சாட்டுக்களுக்கு உரிய ஆதாரம் இல்லை; கணக்கு வழக்குகளை, மார்ச், 3ல் நடக்க உள்ள பொதுக்குழுவில் தாக்கல் செய்ய வேண்டும்’ என, நீதிபதி உத்தரவிட்டார்.