Select Page

City Union Bank



Share this page

கோவா: சமீபத்தில் விடுமுறையை கழிக்க கோவா சென்றிருந்த காங்., தலைவர் ராகுல், அங்கு உடல்நலமில்லாமல் இருக்கும் அம்மாநில பா.ஜ., முதல்வர் மனோகர் பரீக்கரை சந்தித்தது, பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. தன்னை உள்நோக்கத்துடன் அரசியலுக்கு பயன்படுத்துவதற்காக ராகுல் சந்தித்துள்ளார் என பரீக்கர் வேதனை தெரிவித்துள்ளார்.

ரபேல்

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாகவும் அதில் பரீக்கருக்கு தொடர் உள்ளதாகவும் ராகுல் கூறி வருகிறார். அரசியல் களத்தில் இந்த குற்றச்சாட்டு வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் தான் பரீக்கரை ராகுல் கோவாவில் சந்தித்தார்.கோவாவில் இருந்தபோது, இடையில் சட்டீஸ்கரில் நடந்த ஒரு பேரணியில் கலந்துகொண்டு விட்டு மீண்டும் கோவா திரும்பினார் ராகுல். அதன் பிறகு தான் பரீக்கரை அவர் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு 7 நிமிடங்களுக்கு மேல் நீடிக்கவில்லை. கோவா சட்டசபையில் வைத்து தான் பரீக்கரை ராகுல் சந்தித்தார். அவருடன் அம்மாநில காங்., தலைவர்கள் சென்றுள்ளனர். அவர்களிடம் பேசிய பரீக்கர், ‛‛தனது உடல்நிலை பற்றி ராகுல் அவ்வப்போது விசாரித்துக்கொண்டே இருந்தார்” என்றாராம். அதன் பிறகு தான் பரீக்கரும் ராகுலும் தனியாக சந்தித்துள்ளனர்.

தனிப்பட்ட சந்திப்பு

இந்த சந்திப்பு பற்றி பின் டுவிட்டரில் பதிவிட்ட ராகுல், ‛‛இது தனிப்பட்ட சந்திப்பு அவரது உடல்நிலையை விசாரிக்க சென்றேன்” என்று கூறி இருந்தார். அதன் பின் கொச்சியில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய ராகுல், ‛‛ரபேல் ஒப்பந்தத்தில் எனது பங்கு எதுவும் இல்லை” என்று பரீக்கர் கூறியதாக பேசினார். அதாவது பரீக்கரிடம் ரபேல் பற்றி பேசவில்லை என்றவர், பின்னர் பேசினேன் என்கிறார்.

ராகுலின் இந்த குழப்பமான பேச்சு, பரீக்கருக்கே ஆச்சரியம் அளித்தது. ரபேல் விவகாரத்தை வைத்து பிரதமர் மோடிக்கும் பரீக்கருக்கும் இடையே பிளவை ஏற்படுத்தும் ராகுலின் முயற்சி இது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். ரபேல் ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று சுப்ரீம் கோர்ட் கூறிய தீர்ப்பு; பார்லிமென்டில் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பதில் உரை ஆகியவற்றுக்குப் பிறகு ரபேல் பற்றி கேட்பதற்கு காங்.,கிடம் ஒன்றும் இல்லை.

தன்னிடம் தான் ரபேல் ஆவணங்கள் இருப்பதாக பரீ்க்கர் கூறினார் என காங்., திரும்ப திரும்ப கூறி வருகிறது. ரபேல் பற்றிய ஆடியோ தன்னிடம் இருப்பதாக ராகுல் இன்னொரு புறம் கூறினார். அந்த ஆடியோவில் முன்னாள் காங்., எம்.எல்.ஏ.,வும் இந்நாள் பா.ஜ., அமைச்சருமான விஸ்வஜித் ராணேவும் இன்னொரு அடையாளம் தெரியாத நபரும் பேசி உள்ளனர்.

ஆடியோ பொய்

இப்படி ஒரு ஆடியோ இருக்கிறது என்பதே பொய். ஆடியோ உண்மைத் தன்மைக்கு ராகுல் உத்தரவாதம் கொடுப்பாரா என அருண் ஜெட்லி கேட்டார். இந்த ஆடியோவுக்கு உத்தரவாதம் தருமாறு ராகுலிடம் லோக்சபா சபாநாயாகர் சுமித்ரா மகாஜனும் கேட்டார். இதற்கு ராகுல் மறுத்து விட்டார். ஆடியோ என்பதே ராகுலின் கடைசி முயற்சி என்றார் பரீக்கர்.

எந்த ஆதாரமும் இல்லாமல், ரபேல் பற்றி பரீக்கரிடம் இருக்கும் ஆவணங்கள், மோடியை விட தனக்கு அதிக வலிமையை தந்துள்ளதாக ராகுல் கூறி வருகிறார். இதை பரீக்கர் மறுத்தார்.
இரண்டு நாட்களுக்கு முன் டுவீட் செய்த ராகுல், ‛‛ஆடியோ விஷயம் வெளியாகி 30 நாட்கள் ஆகி விட்டன. எந்த எப்.ஐ.ஆர் பதிவோ, விசாரணையோ நடக்கவில்லை. ஆடியோவும் உண்மை. பரீக்கரிடம் ரபேல் பற்றிய, பரபரப்பான தகவல்கள் அடங்கிய ஆவணங்கள் இருக்கின்றன. இதனாலேயே, மோடியை விட பரீக்கர் ‛பவர்புல்’ ஆக இருக்கிறார்.”என பதிவிட்டார். ஆக, பரீக்கரும் ராகுலும் உண்மையில் என்ன பேசினார்கள் என்பது தெரியாமல், பலர் ‛தலையை ‛பிய்த்துக்கொண்டு” இருக்கினறனர்.

வேதனை

இதற்கிடையில், கோவா முதல்வர் பரீக்கர் சந்திப்பு குறித்து காங்கிரஸ் ராகுல் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, இன்று (ஜன.,30) ராகுலுக்கு, பரீக்கர்கடிதம் எழுதி உள்ளார்.அந்த கடிதத்தில், பரீக்கர் கூறியுள்ளதாவது: என்னை சந்திக்க வந்தது அரசியல் ஆதாயத்திற்காக என்பதை நினைக்கும் போது வருத்தம் அளிக்கிறது. 5 நிமிடம் நடந்த சந்திப்பில், ரபேல் குறித்து நீங்கள் எதையும் குறிப்பிடவில்லை. அது குறித்து விவாதிக்கவில்லை. நமது மக்களுக்காக சேவை செய்வதற்காக, வாழ்த்து தெரிவிக்கவே நீங்கள் என்னை சந்திப்பதாக நினைத்தேன்.
வேறு உள்நோக்கம் இருப்பது பின்னர் தான் தெரியவந்தது. பெரிய ஏமாற்றத்துடன், உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்பதற்காக இந்த கடிதத்தை எழுதி உள்ளேன். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நபர்களை சந்திப்பதை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்த வேண்டாம் என உங்களை கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.


Share this page