சென்னை: தமிழகத்தில் உள்ள, அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், இன்று(ஜன.,31) இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
தமிழகம் முழுவதும், வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தப் பணி, 2018 செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் நடந்தது. இரு மாதங்களில், பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்றக் கோரி, விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதற்காக, அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. ‘ஆன்லைன்’ வழியாக விண்ணப்பிக்கவும், ஏற்பாடு செய்யப்பட்டது. இரண்டு மாதங்களில், 18.87 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பெயர் சேர்க்க கோரி மட்டும், 13.11 லட்சம் விண்ணப்பங்கள் வந்தன.

தொகுதி வாரியாக..
விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணி, இரண்டு மாதங்களாக நடந்து வந்தது. அத்துடன், வாக்காளர் பட்டியலில், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள பெயர்களை நீக்கும் பணியும் நடந்தது. அனைத்து பணிகளும் முடிந்து, இறுதி வாக்காளர் பட்டியல், இன்று காலை, அனைத்து மாவட்டங்களிலும், சட்டசபை தொகுதி வாரியாக, வெளியிடப்பட உள்ளது.

ஆர்வம்:
லோக்சபா தேர்தல் வர உள்ளதால், ஒவ்வொரு தொகுதியிலும், எவ்வளவு வாக்காளர்கள் உள்ளனர் என்ற, விபரத்தை அறிய, அனைத்து கட்சியினரும் ஆர்வமாக உள்ளனர்.