விஜயவாடா: ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாததை கண்டித்து, பிப்., 13ல், டில்லியில், ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான, சந்திரபாபு நாயுடு, உண்ணாவிரத போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளார்.
‘ஆந்திராவில் இருந்து தனி மாநிலமாக தெலுங்கானா பிரிக்கப்பட்டபோது, ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்’ என, கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை, மத்திய அரசு நிறைவேற்ற தவறியதால், ஆளும், தே.ஜ., கூட்டணியில் இருந்து சந்திரபாபு நாயுடு, கடந்த ஆண்டு விலகினார். இந்நிலையில், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தராத மத்திய அரசை கண்டித்து, பிப்., 13ல், டில்லியில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக, சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
கடைசி நாளில்..
இது குறித்து, தெலுங்கு தேசம் கட்சியின் லோக்சபா, எம்.பி., அவந்தி ஸ்ரீனிவாஸ் கூறியதாவது: தெலுங்கு தேசம் கட்சி, எம்.பி.,க்கள் கூட்டம், சமீபத்தில் நடந்தது. அதில், பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. நரேந்திர மோடி அரசு, ஆந்திர மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றி உள்ளது என்பதை, பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடரில் பேசும்படி, சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். மேலும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தராததை கண்டித்து, பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாளான பிப்., 13ல், டில்லியில், அவர் உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.