சென்னை: தமிழக முதலீடுக்கு சிறந்த பலன் கிடைக்கும் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார்.
புதிய வாசல்
சென்னையில் நடக்கும் உலக முதலீட்டாளர் மாநாட்டின் நிறைவு நாளான இன்று கலந்து கொண்டு, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது: நாட்டிலேயே அழகான மாநிலம் தமிழகம். தமிழும், தமிழகமும் எனது மனதிற்கு விருப்பமாவை. திறமையாக, கடினமாக உழைக்கும் தொழிலாளர்கள் தமிழகத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் முதலீட்டை விதைக்கும் முதலீட்டாளர்கள், சிறந்த அறுவடையை பெறுவார்கள். முதலீட்டை ஈர்ப்பதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. சாலை, வான்வெளி, துறைமுகம் உள்ளிட்ட போக்குவரத்து வசதிகளை தமிழகம் பெற்றுள்ளது. ஆட்டோமொபைல் உள்ளிட்ட துறைகளில் தமிழகம் சிறந்து விளங்குகிறது.
இந்த மாநாட்டில் 3 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகளை ஈர்த்தது மகிழ்ச்சி அளிக்கிறது. முதலீட்டாளர் மாநாடு, முதலீட்டாளர்களுக்கும், வாய்ப்புகளுக்கும் புதிய வாசல்களை திறந்துள்ளது. நாகையில், பெரிய அளவில் முதலீடு செய்ய நிறுவனம் ஒன்று முன்வந்துள்ளது. முதலீட்டாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தரும்படி முதல்வரை கேட்டு கொண்டுள்ளேன்.
உலகம் வியப்பு
இந்தியாவில் செய்யப்படும் முதலீடு சிறந்த பயன் அளிக்கும். உலக அளவில் அதிக பொருளாதார வளர்ச்சியை இந்தியா பெற்று வருகிறது. பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்தியாவின் வளர்ச்சியானது, உலகின் வளர்ச்சி, அமைதி, நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும். இந்தியாவின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள இளைஞர்கள். பொருளாதார சீர்திருத்தம் காரணமாக முதலீட்டுக்கு உகந்த நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை உலகம் வியந்து பார்க்கிறது.
விரைவில் தீர்வு
வாஜ்பாய் ஆட்சி காலத்தில் தாராளமயமாக்கல் வேகமெடுத்தது. மாற்று கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும், நரசிம்மராவ், மன்மோகன் சிங் ஆட்சியிலும் தாராளமயமாக்கல் நடந்தது. இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் செல்வதை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்.
சீர்திருத்தங்களின் தலைவர் என பிரதமர் மோடியை அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா பாராட்டினார். வளர்ச்சியில், சீனாவை இந்தியா முந்தும் என சமீபத்தில், ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனும் கூறியுள்ளார். தொடக்கத்தில் சிறிய பிரச்னை இருந்தாலும், சீர்திருத்தங்கள் நீண்ட கால பலன் அளிக்கும். இந்தியாவிலும், தமிழகத்திலும் செய்யப்படும் முதலீடுக்கு நல்ல பலன் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மாபெரும் வெற்றி
இந்த மாநாட்டில் பேசிய முதல்வர் பழனிசாமி, உலக முதலீட்டாளர் மாநாட்டில், ரூ.3.40 லட்சம் கோடி அளவுக்கு முதலீடு ஈர்க்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 10.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இரண்டு நாள் நடந்த முதலீட்டாளர் மாநாடு, மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
ஒப்பந்தம்
இந்த மாநாட்டில், தமிழகத்தில் சிபிசிஎல் நிறுவனம் ரூ.27,400 கோடி, என்எல்சி ரூ.23,800 கோடி, அதானி நிறுவனம் ரூ.10 ஆயிரம் கோடி, மின்சார வாகனம் தயாரிக்க ஹூண்டாய் நிறுவனம் ரூ. 7 ஆயிரம் கோடி, எம்ஆர்எப் ரூ.7 ஆயிரம் கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.