கவுகாத்தி: அசாமில் தேசிய குடிமக்கள் பதிவு வரைவு பட்டியலில் நீக்கப்பட்ட 40 லட்சம் பேரில் 31 லட்சம் பேர் தங்கள் பெயரை சேர்க்க மீண்டும் மனு செய்துள்ளனர்.வடகிழக்கு மாநிலமான அசாமில் வங்கதேசத்தில் இருந்து வந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில் அசாம் மாநிலத்தில் உண்மையான இந்தியர்கள் யார் என்பதை கண்டறிய என்.ஆர்.சி. எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவு வரைவு பட்டியல் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலையில் வெளியிடப்பட்டது.
இதில் 40 லட்சம் பேர் பதிவேட்டில் சேர்க்கப்படவில்லை. குடிமக்கள் பட்டியலில் 40 லட்சம் பேர் விடுபட்டது தொடர்பாக சர்ச்சை எழுந்தது. மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.இந்நிலையில் விடுபட்ட 40 லட்சம் பேரில் 31 லட்சம் பேர் தங்களது பெயரை சேர்க்குமாறு மீண்டும் மனு செய்துள்ளனர். விடுபட்டவர்களின் பெயர்களை சேர்ப்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சகமும், அசாம் மாநில அரசு ஜனவரி 31-ம் தேதி பரிசீலனை செய்து விரைவில் முடிவு அறிவிக்க உள்ளது.