தாகா: வங்கதேசத்தில், பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான, அவாமி லீக் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது. இதனையடுத்து நான்காவது முறையாக, பிரதமர் பதவியை ஹசீனா கைப்பற்றுகிறார்.
வங்கதேசத்தில், பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான, அவாமி லீக் கட்சி ஆட்சியில் உள்ளது. ஆட்சிக் காலம் முடிவுக்கு வருவதால், நேற்று பொதுத் தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள, 300 எம்.பி., தொகுதிகளில், 299க்கு நடந்த தேர்தலில், 1,848 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஒரு தொகுதியில், வேட்பாளர் இறந்ததால், ஓட்டு பதிவு ஒத்தி வைக்கப்பட்டது.
நேற்று நடந்த ஓட்டு எண்ணிக்கையின் முடிவில், ஆளும் அவாமி லீக் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. தேர்தல் முடிவு வெளியிடப்பட்ட 298 தொகுதிகளில் 287 தொகுதிகளை கைபற்றியுள்ள பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான, அவாமி லீக் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. முக்கிய எதிர்கட்சியான பங்களாதேஷ் தேசிய கட்சி வெறும் 6 இடங்களை மட்டுமே கைபற்றியுள்ளது. தேர்தல் முடிவை புறக்கணிப்பதாக எதிர்கட்சி அறிவித்துள்ளது.
