Select Page

City Union Bank



Share this page

சென்னை, வருமான வரி வழக்கில், சாட்சிகள் குறுக்கு விசாரணைக்கு அனுமதி கோரி, முன்னாள் தலைமை செயலர் தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.தமிழக அரசின் தலைமை செயலராக இருந்த ராமமோகன ராவ் தாக்கல் செய்த மனு:என் மகன் விவேக், தனியாக வணிகம் செய்கிறார். ‘எஸ்.ஆர்.எஸ்., மைன்ஸ்’ என்ற நிறுவனத்துடன், சீனிவாசலு என்பவருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அந்த நிறுவனத்தில், வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அந்த வணிகத்தில், என் மகனின் தொடர்பு பற்றி, சீனிவாசலு வாக்குமூலம் அளித்துள்ளார்.இதையடுத்து, என் வீட்டுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் வந்து சோதனை நடத்தினர். அதில், நான் குறுக்கிடவில்லை. அதிகாரிகள் கடமையாற்ற, எந்த இடையூறும் இன்றி அனுமதித்தேன். சோதனைக்கு பின், என் பெயரையும், வழக்கில் சேர்த்துள்ளனர்.வருமான வரித்துறை எந்த வாக்குமூலத்தை நம்பியதோ, அதை அளித்த சீனிவாசலுவிடம், குறுக்கு விசாரணை மேற்கொள்ள அனுமதி கோரினேன். அதற்கு, வருமான வரி துறை துணை ஆணையர் முதலில் அனுமதி அளித்தார். பின், சீனிவாசலு பிறழ் சாட்சியாக மாறியதால், குறுக்கு விசாரணை மேற்கொள்ள, என்னை அனுமதிக்கவில்லை.எனவே, வருமான வரித்துறை நம்பியுள்ள சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை செய்ய, என்னை அனுமதிக்கும்படி, உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதி, பி.டி.ஆஷா முன், விசாரணைக்கு வந்தது. வருமான வரித்துறை சார்பில், வழக்கறிஞர், ஏ.பி.சீனிவாஸ் ஆஜராகி பதில் அளித்தார். இதையடுத்து, வருமான வரித்துறை துணை ஆணையர் பிறப்பித்த உத்தரவில் தவறில்லை எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதி உத்தரவிட்டார்.


Share this page