சென்னை : அரசின் வருவாயை அதிகரிக்க, கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளில், மீண்டும் மணல் குவாரிகள் திறப்பதற்கான ஏற்பாடுகளை, பொதுப்பணித் துறை துவக்கியுள்ளது.
ஆறுகளில், அதிகளவு மணல் அள்ளப்படுவதால், நீரோட்டம் பாதிக்கப்படுவதாக புகார் உள்ளது. எனவே, இதற்கு மாற்றாக, ‘எம் – சாண்ட்’ எனப்படும், செயற்கை மணலை பயன்படுத்த, அரசு ஊக்குவித்து வருகிறது. மணல் தட்டுப்பாட்டை தீர்க்க, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை, மூன்று கப்பல்களில். 1.60 லட்சம் டன் மணல், மலேஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, விற்பனை நடக்கிறது. மேலும், ஒரு கப்பல் மணல் இறக்குமதி செய்யப்பட உள்ளது.
இதற்கிடையில், வடகிழக்கு பருவ மழை பொய்த்து உள்ளது. இதனால், காவிரி, கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளில், நீரோட்டம் குறைந்து உள்ளது. மணல் குவாரிகள் மூடப்பட்டதால், அரசின் வருவாய் குறைந்துள்ளது. அரசு நிதி நெருக்கடியில், தவித்து வருகிறது. பல மாவட்டங்களில், கட்டுமான பணிகளுக்கு, மணல் அதிகளவில் தேவைப்படுகிறது. எனவே, மீண்டும் ஆறுகளில் மணல் அள்ள, அரசு முடிவெடுத்துள்ளது.
முதற்கட்டமாக, 20 குவாரிகளை திறப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, கொள்ளிடம் ஆற்றில், தஞ்சாவூர் மாவட்டம், திருச்சிணாம்பூண்டியில், குவாரி திறக்கும் நடவடிக்கை துவங்கி உள்ளது. இதையடுத்து, படிப்படியாக குவாரிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது.