Select Page

City Union Bank



Share this page

புதுடில்லி : ‘விவசாயிகள் கடனை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்’ என, காங்., தலைவர் ராகுல் வலியுறுத்தி வரும் நிலையில், பா.ஜ., ஆட்சியில் உள்ள குஜராத் மாநிலத்தில், கிராம பகுதிகளில், 650 கோடி ரூபாய் மதிப்பிலான, மின் கட்டண பில்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தல்களில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில், காங்., வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. காங்., அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி, ம.பி.,யில், காங்.,கை சேர்ந்த முதல்வர் கமல்நாத், விவசாய கடன்கள் ரத்து செய்யப்படுவதாக, நேற்று முன்தினம் அறிவித்தார்.

இதையடுத்து, ‘விவசாய கடனை, மத்திய அரசும் ரத்து செய்ய வேண்டும்’ என, காங்., தலைவர் ராகுல் வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில், குஜராத்தில், கிராமங்களை சேர்ந்த, 6.22 லட்சம் வீடுகளுக்கான, 650 கோடி ரூபாய் மதிப்பிலான மின் கட்டணத்தை ரத்து செய்துள்ளதாக, அம்மாநில அரசு நேற்று அறிவித்தது.

இதுகுறித்து, குஜராத் மாநில மின் துறை அமைச்சர் சவுரப் படேல், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: குஜராத்தில், மின் திருட்டு, மின் பயன்பாட்டுக்கான பில்களுக்கு பணம் செலுத்தாமை போன்ற காரணங்களால், 6.22 லட்சம் வீடுகளில், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. வீடு, விவசாயம், வர்த்தகம் உள்ளிட்ட பிரிவுகளில் இந்த இணைப்புகள் அளிக்கப்பட்டிருந்தன.

இந்த வீடுகளில் வைக்கப்பட்டிருந்த மின் கட்டண பாக்கி, 650 கோடி ரூபாயை, மாநில அரசு ரத்து செய்துள்ளது. இதையடுத்து, இந்த வீடுகளுக்கு, மீண்டும் உடனடியாக மின் இணைப்பு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Share this page