புதுடில்லி: சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தல்களில் காங்., வெற்றி பெற்ற ராஜஸ்தான், சத்தீஸ்கர், ம.பி., மாநிலத்தில் இன்று(டிச., 17) முதல்வர்கள் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், தெலுங்கானா மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் சமீபத்தில் முடிந்தது. இதில், ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்., வெற்றி பெற்றது. அம்மூன்று மாநிலங்களில் அக்கட்சி மூத்த தலைவர்கள், இன்று, முதல்வர்களாக பதவி ஏற்கின்றனர்.
ராஜஸ்தானில், முதல்வராக அசோக் கெலாட், துணை முதல்வராக சச்சின் பைலட் பதவி ஏற்க உள்ளனர். ஜெய்ப்பூரில் இன்று காலை 10.30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
ம.பி.,யில், காங்., மூத்த தலைவர் கமல்நாத் இன்று முதல்வராக பதவி ஏற்க உள்ளார். பிற்பகல், 1:30க்கு, போபாலில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. சத்தீஸ்கர் முதல்வராக, காங்., தலைவர் புபேஷ் பெஹல் இன்று மாலை 4.30 மணிக்கு பதவியேற்க உள்ளார். இந்த மூன்று நிகழ்ச்சிகளிலும், காங்., தலைவர் ராகுல் பங்கேற்க உள்ளார்.
