சபரிமலை: சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு மீது தீர்ப்பு எதிராக வந்தாலும், சபரிமலையில் பெண்கள் அனுமதி விஷயத்தில் பக்தர்களுடன் என்.எஸ்.எஸ்.,(நாயர் சர்வீஸ் சொசைட்டி) நிற்கும் என்று பொது செயலாளர் சுகுமாரன் நாயர் கூறினார். தேவைப்பட்டால் பக்தர்களுடன் மத்திய அரசை அணுகுவோம் என்று அவர் தெரிவித்தார்.
எல்லா வயது பெண்களும் சபரிமலை செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்புக்கு எதிராக முதலில் போராட்டத்தை தொடங்கியது என்.எஸ்.எஸ். அமைபப்பு. எந்த அரசியல் கட்சியையும் சாராமல் நடந்த இந்த போராட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இதன் பின்தான் சபரிமலை போராட்டம் வலுப்பெற்றது.
சங்கனாச்சேரியில் நடந்த நிகழ்ச்சியில் சுகுமாரன் நாயர் பேசியதாவது: சபரிமலை விஷயத்தில் நம்பிக்கை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைபாடு. சபரிமலையில் நம்பிக்கை மீறப்பட வேண்டும் என்ற எந்த நீதிமன்றமும் எப்போதும் நினைத்தது இல்லை. ஆட்சியாளர்களின் அவசரமும், தீர்ப்பை தவறாக புரிந்ததும்தான் இவ்வளவு பிரச்னைக்கும் காரணம்.
நம்பிக்கையை தகர்க்க யார் முயற்சித்தாலும் இறுதியில் வெற்றி பக்தர்களுக்குதான் கிடைக்கும். நீதிமன்றங்கள் இந்த விஷயத்தில் தெளிவான முடிவு எடுக்கும் என்று நம்புகிறேன். தீர்ப்பு மாறிவந்தால் பக்தர்களுடன் சேர்ந்து மத்திய அரசை என்.எஸ்.எஸ்., நாடும். இவ்வாறு அவர் கூறினார்.