Select Page

City Union Bank



Share this page

புதுடில்லி: ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் நாடு கடத்தப்பட்ட இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேலின் சிபிஐ காவலை டில்லி கோர்ட் மேலும் 4 நாட்கள் நீட்டித்து அனுமதி வழங்கியுள்ளது.

சிபிஐ காவல்

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட, வி.வி.ஐ.பி.,க்களுக்கான, ஹெலிகாப்டர் வாங்குவதற்காக, ஐரோப்பிய நாடான இத்தாலியை சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன், ஒப்பந்தம் செய்யப்பட்டது. காங்., தலைமையிலான, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில், ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, முக்கிய நபர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த வழக்கை, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் துபாயிலிருந்து கடந்த வாரம் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், பாட்டியாலா கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை 5 நாள் காவலில் வைத்து விசாரணை நடத்த கோர்ட் அனுமதி வழங்கியது.

சிபிஐ கோரிக்கை

இந்நிலையில், காவல் முடிந்த நிலையில், கிறிஸ்டியன் மைக்கேல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். சிபிஐ தரப்பு வழக்கறிஞர் கோர்ட்டில் வாதாடுகையில், சாட்சிகள் மற்றும் ஆவணங்களை வைத்து கிறிஸ்டியன் மைக்கேலிடம் விசாரணை நடத்த வேண்டும். அவரை மும்பை அழைத்து சென்று விசாரணை நடத்த வேண்டியுள்ளது. இதனால், அவரது காவலை மேலும் 5 நாள் நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

கிறிஸ்டியன் மைக்கேல் சார்பில் ரோஸ்மேரி பாட்ரிஜி என்ற வழக்கறிஞர் ஆஜரானார். மைக்கேலுக்காக இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்து கோர்ட்களில் கடந்த 5 ஆண்டுகளாக ஆஜராகி வருவதாக கூறினார். இதனை ஏற்று கொண்ட கோர்ட், சிறிது நேரம் அவரிடம் பேச அனுமதி வழங்கியது. பின்னர், வழக்கு தொடர்பாக சில ஆவணங்கள் தன்னிடம் உள்ளதாகவும், அதனை கோர்ட்டில் சமர்ப்பிக்க அனுமதி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.


மறுப்பு

தொடர்ந்து இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, கிறிஸ்டியன் மைக்கேலின் சிபிஐ காவலை மேலும் 4 நாள் நீட்டித்து உத்தரவிட்டார். மேலும், சிபிஐ விசாரணையின் போது, கிறிஸ்டியன் மைக்கேலை சந்திக்க வழக்கறிஞர் ரோஸ்மேரி பாட்ரிஜிக்கு அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்தார்.


Share this page