பாட்னா:’உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கு, அவசர சட்டம் இயற்றப்பட்டால் ஆதரவு தெரிவிக்க மாட்டோம்’ என, பா.ஜ., கூட்டணி கட்சியான, ஐக்கிய ஜனதா தளம் தெரிவித்துள்ளது.
மத்தியில் ஆளும், பா.ஜ., அரசின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் இடம்பெற்றுள்ளது. பீஹாரில், இந்த இரு கட்சிகளின் கூட்டணி அரசு அமைந்துள்ளது.
இந்த நிலையில், ஐக்கிய ஜனதா தளம், பொதுச் செயலர், ஆர்.சி.பி., சிங் கூறியதாவது:உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கு, அவசர சட்டத்தை, மத்தியில் ஆளும், பா.ஜ., அரசு இயற்றினால், அதற்கு ஆதரவு தெரிவிக்க மாட்டோம். சமூக நல்லிணக்கம் நீடிக்க வேண்டும் என, நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
ஐந்து மாநிலங்களுக்கு நடந்த தேர்தலால், பா.ஜ., உடனான கூட்டணி குறித்து, மறுஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.ஐக்கிய ஜனதா தளம் கட்சி தேசிய துணைத் தலைவர், பிரஷாந்த் கிஷோர் கூறியதாவது:ராமர் கோவில் பிரச்னையை எழுப்பாமலேயே, அடுத்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., வெற்றி பெறும்.
கடந்த தேர்தலிலும், ராமர் கோவில் விவகாரம் குறித்து, பா.ஜ., பேசவில்லை.கடந்த லோக்சபா தேர்தலின்போது, அந்தக் கட்சிக்கு பிரசார வியூகங்களை நான் வகுத்து கொடுத்தேன். தற்போதைய நிலையில், அந்தத் தேர்தலை விட, சற்று பின் தங்கியிருந்தாலும், மீண்டும், பா.ஜ., ஆட்சியே அமையும்.இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து, பீஹார், பா.ஜ., செய்தித் தொடர்பாளர் ராஜிவ் ரஞ்சன் கூறியதாவது:அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என்பது, எங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. அதனால், ராமர் கோவில் கட்டும் பணிகள் விரைவில் துவங்கும்.கடந்த லோக்சபா தேர்தலை விட தற்போது, கட்சியின் செல்வாக்கு குறைந்துள்ளதாகக் கூறுவதை ஏற்க முடியாது. மத்தியில், மீண்டும், பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமையும்.இவ்வாறு அவர் கூறினார்.
