புதுடில்லி: சுற்றுச் சூழலுக்கு உகந்த பொருட்களுக்கு ஊக்கம் அளிக்கும் நோக்கில், மத்திய அரசு, தன் கட்டுமான பணிகளில், செங்கற்களை பயன்படுத்துவதற்கு தடை விதிப்பது குறித்து பரிசீலித்து வருகிறது.
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகத்தை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர், டில்லியில் நேற்று கூறியதாவது: மத்திய அரசு, சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களுக்கு ஊக்கம் அளிக்க முடிவு செய்துள்ளது. இதையடுத்து, களிமண் சுட்டு உருவாக்கப்படும் செங்கற்களை, மத்திய அரசின் திட்ட பணிகளில் பயன்படுத்துவதற்கு தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும்படி, சி.பி.டபிள்யூ.டி., எனப்படும் மத்திய பொதுப்பணித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, இது தொடர்பான தங்கள் ஆலோசனைகளை வழங்கும்படி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, சி.பி.டபிள்யூ.டி., உத்தரவிட்டுள்ளது. கழிப் பொருட்களை பயன்படுத்தி, சுற்றுச் சூழலுக்கு உகந்த, கட்டுமானத்துக்கு பயன்படும் கற்களை தயாரிக்கும் தொழில் நுட்பங்கள், தற்போது கிடைக்கின்றன. இத்தகைய கற்களை, எதிர்காலத்தில் பயன்படுத்துவது குறித்து, சி.பி.டபிள்யூ.டி., தீவிர பரிசீலனையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
செங்கற்களை தயாரிக்க, நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது. இதனால், செங்கல் சூளைகள் உள்ள பகுதிகளில், காற்று மாசு அதிகரிக்கிறது. எனவே, இந்த மாசு அளவை குறைக்கும்படி, டில்லி நிர்வாகத்துக்கு, அக்டோபரில், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
