போபால்: நடந்து முடிந்த ம.பி சட்டசபைதேர்தல் பதிவான ஓட்டுபதிவு இயந்திரங்களை மாற்ற முயற்சி நடப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து கூறப்படுவதாவது: ம.பி.,மாநிலத்தில் கடந்த 28-ம் தேதி சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுபதிவு நடைபெற்றது. 230 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல்நடைபெற்றது. ஓட்டு எண்ணிக்கை வரும் 11-ம் தேதிநடைபெற உள்ளது.
இந்நிலையில் சத்னா என்ற இடத்தில் ஓட்டு எண்ணும் மையத்திற்கு சில பெட்டிகளை கொண்டு செல்வது போன்ற வீடியோ வெளியானது. இதனையடுத்து பா.ஜ., கட்சியினர் முறைகேட்டில் ஈடுபடுவதாகவும், ஓட்டு பதிவு இயந்திரங்களில் குளறுபடிஏற்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினர்.
இதனையடுத்து அப்பகுதிக்கு வந்த மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் இயந்திரங்கள் எதுவும் மாற்றப்பட வில்லை எனவும், உபரியாக இருந்த இயந்திரங்கள் மட்டுமே அங்கு கொண்டு வரப்பட்டதாகவும் கூறினர். மேலும் போபால் நகரில் இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாகவும் ஒரு மணி நேரத்தில்அவை சரி செய்யப்பட்டு விட்டதாகவும், இயந்திரங்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி குழு சத்தீஸ்கர் மற்றும் ம.பி.,மாநிலங்களில் ஓட்டு பதிவு இயந்திரங்களை பாது காப்பது குறித்து தேர்தல் ஆணையத்தை சந்தித்தது.