புதுடில்லி: ‘விசாரணை கைதிகள் தொடர்பான வழக்குகளில், விரைவாக விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்காமல், நீதித்துறையை மத்திய அரசு விமர்சிக்கிறது’ என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இருவர், சமீபத்தில், ஹரியானா மாநிலம், பரீதாபாத்தில் உள்ள சிறைக்கு ஆய்வுக்காக சென்றனர். சிறையில் அடிப்படை வசதிகள் இல்லை. இது பற்றி, உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதியிடம் தெரிவித்தனர். இந்த விவகாரத்தை, உச்ச நீதிமன்றம் தானாக முன் வந்து, விசாரித்தது.இந்நிலையில், இது தொடர்பான வழக்கு விசாரணை, நீதிபதி, மதன் பி லோகுர் தலைமையிலான அமர்வு முன், நேற்று நடந்தது.
மத்திய அரசு சார்பில் ஆஜரான, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், அமன் லேகி கூறுகையில், ”விசாரணை நீதிமன்றங்கள், மிகவும் தாமதமாக செயல்படுவதால் தான், விசாரணை கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது,” என்றார்.
இதையடுத்து, நீதிபதிகள் கூறியதாவது: விசாரணை கைதிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கான நடவடிக்கையை எடுக்காமல், குற்றவியல் நீதி சட்டத்தையும், நீதித்துறையையும் விமர்சிப்பது, அரசுக்கு வழக்கமாகிவிட்டது. அரசு எப்படி செயலாற்ற வேண்டும் என, நீதிமன்றங்கள் சொல்ல முடியாது. கைதிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கான வழிகளை ஆய்வு செய்யுங்கள்; அதன்பின், நீதித்துறையை விமர்சியுங்கள். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.