சென்னை : கஜா புயல் பாதிப்பு பகுதிகளை இன்று மற்றும் நாளை(நவ.,29. 30) மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆய்வு செய்ய உள்ளதாக பா.ஜ., மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
கஜா புயல், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் சேதத்தை விளைவித்துள்ளது. அங்கு இயல்புநிலை மெல்ல திரும்பிக்கொண்டிருக்கும் நிலையில், மீண்டும் பழைய நிலைக்கு வர இன்னும் சிலமாதங்கள் பிடிக்கும் என்பதற்கு அங்கு நிலவிவரும் காட்சிகளே சாட்சி.
முதல்வரின் ஆய்வு மற்றும் நிவாரண உதவிகள் :
கஜா புயலின் பாதிப்புகளிலிருந்து மீளும் பொருட்டு, அப்பகுதிகளில் நிவாரணப்பணிகளை மேற்கொள்ளும்பொருட்டு, முதல்வர் பழனிசாமி, ரூ. 1000 கோடியை ஒதுக்கினார். பின், ஹெலிகாப்டர் மூலம் பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டார். பின், டில்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து, புயலின் பாதிப்பு குறித்து விளக்கி ரூ. 15 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்கவேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார். பின், ரயிலின் மூலம் புயல் பாதிப்பு பகுதிகளுக்கு சென்ற முதல்வர் பழனிசாமி, அங்கு மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
மத்திய அமைச்சர் ஆய்வு :
இந்நிலையில், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், புயல் பாதிப்பு பகுதிகளில் இன்று ( 29ம் தேதி) மற்றும் நாளை ( 30ம் தேதி) ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.