சென்னை: கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக மத்திய குழு தெரிவித்துள்ளது.
3 நாள் ஆய்வு
கஜா புயலால், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்கள் உருக்குலைந்துள்ளன. டெல்டா மாவட்டங்களில், பயிர் சேதம் மட்டுமின்றி, விவசாயிகள், பொதுமக்கள், தங்களின் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்து தவிக்கின்றனர். புயல் பாதிப்புகளை, முதல்வர் பழனிசாமி, ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். பின், டில்லி சென்ற அவர், பிரதமரை சந்தித்தார். புயல் பாதிப்பு குறித்து விவரித்து, நிவாரண நிதியாக, 15 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என, வலியுறுத்தினார்.
மத்திய உள்துறை இணை செயலர், டேனியல் ரிச்சர்டு தலைமையில், ஏழு பேர் குழுவை, மத்திய அரசு, தமிழகத்திற்கு அனுப்பியது. இக்குழுவினர், புயல் பாதித்த மாவட்டங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். எதிர்பார்த்ததை விட அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கருத்து தெரிவித்தனர். ஆய்வு முடித்த பின்னர் காரைக்கால் பகுதிகளில் ஆய்வு செய்த அவர்கள் புதுச்சேரி முதல்வருடன் ஆலோசனை நடத்தினர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
3 நாட்கள் தமிழகத்தில் ஆய்வு நடத்தி தலைமை செயலகம் வந்த மத்திய குழுவினர் முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தினார்.
மத்திய குழுவினர் நிருபர்களிடம் கூறியதாவது: கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வு செய்தோம். ஏராளமான வாழை, தென்னை, மரங்கள் உள்ளிட்டவை முறிந்துள்ளன. மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. ஏராளமான வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
புயலால் ஏற்பட்ட இழப்பு மற்றும் மக்களின் வழிகளை நேரில் அறிந்தோம். புயல் கரையை கடந்த போது, ஏராளமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு விரைவாகவும் சிறப்பாகவும் செயல்பட்டுள்ளது. தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பெரிய உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்க அனைத்து துறைகளும் இயங்கி வருகின்றன. டில்லி சென்று, எங்களின் அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.