புதுடில்லி:சிந்து நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தில் ஒதுக்கப்பட்டுள்ள அளவில், பயன்படுத்தாத நீரை தேக்கி வைக்கும் வகையில், மூன்று அணைகள் கட்டும் பணிகளை விரைவில் மேற்கொள்ள, மத்திய அரசு தீவிரமாக உள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் இடையே பாயும், சிந்து நதியில், நீரை பங்கிட்டு கொள்வது குறித்து, ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சிந்து நதியின் துணை நதிகளான சட்லஜ். பியாஸ், ரவி ஆகியவற்றில் பாயும் நீரை இந்தியாவும்; செனாப், ஜீலம், சிந்து நதியில் உள்ள நீரை, பாகிஸ்தானும் பயன்படுத்திக் கொள்ளலாம்.ஆனால், ஒதுக்கப்பட்டுள்ள நீரை, நம் மாநிலங்கள் முழுமையாக பயன்படுத்தவில்லை. பயன்படுத்தப்படாத நீர், பாகிஸ்தானுக்கு செல்கிறது.
இந்த பயன்படுத்தப்படாத நீரை சேமிக்கும் வகையில், பஞ்சாப் மற்றும் ஜம்மு – காஷ்மீர் மாநிலங்களில், மூன்று அணைகள் கட்டவும், இவற்றின் மூலம் மின் உற்பத்தி செய்யவும் திட்டமிடப்பட்டது. இந்த அணைகள் கட்டுவதற்கான சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு, விரிவான திட்டத்தை, மாநில அரசுகள் அளித்துள்ளன.அணைகள் கட்டுவதற்கு, மத்திய அரசும் ஒப்புதல் அளித்துள்ளது. அதனால், மிக விரைவில், இந்தப் பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பஞ்சாப் மாநிலத்தில், சட்லஜ் – பியாஸ் நதிகளில் இரண்டாவது அணை மற்றும் ஷாபுர் – கான்டி அணை திட்டம் அமைய உள்ளது. ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில், உஜ் அணை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
அமைச்சர்கள் பாகிஸ்தான் பயணம்
பாகிஸ்தானின் கர்தார்புரில் உள்ள, குருநானக் குருத்வாராவுக்கு, இந்திய எல்லையில் இருந்து, புதிய பாதை அமைக்கப்பட உள்ளது. வரும், 28ல் நடக்கும் துவக்க விழாவில் பங்கேற்க, வெளியுறவு அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜுக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது. ”மத்திய அரசின் சார்பில், மத்திய அமைச்சர்கள் ஹர்சிம்ரத் கவுர் பாதல், ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் பங்கேற்பர்,” என, அவர் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான, அமரீந்தர் சிங்கிற்கு, பாக்., விடுத்துள்ள அழைப்பை, அவர் புறக்கணித்துள்ளார். அதேநேரத்தில், பஞ்சாப் மாநில சுற்றுலா துறை அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான, சித்துவுக்கும், பாக்., சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.’இந்த விழாவுக்கு செல்ல, சித்து விரும்பினாலும், வெளியுறவு அமைச்சகம் அனுமதி அளித்தால் மட்டுமே, அவர் செல்ல முடியும்’ என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.