புதுடில்லி: சிறையில் உள்ள சில கைதிகளுக்கு சொகுசு வசதிகள் அளிக்கப்படுவது குறித்த செய்திகளை மேற்கோள்காட்டி, ‘சிறைகளில் தனி நிர்வாகம் நடக்கிறதா’ என, உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சிறைகளில் அடிப்படை வசதிகள் இல்லாதது தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள், ஹரியானா மாநிலம், பரிதாபாத் சிறையில், இந்தாண்டு ஜூனில் நேரடி ஆய்வு செய்தனர். இது தொடர்பான வழக்கு, நீதிபதி, மதன் பி லோகுர் தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அமர்வு கூறியதாவது:டில்லியில் உள்ள திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, யூனிடெக் கட்டுமான நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், சஞ்சய் சந்திரா மற்றும் அவரது சகோதரர் அஜய் சந்திராவுக்கு, பல்வேறு சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக, சிறை கைதிகள் அளித்த புகாரின் அடிப்படையில், டில்லி உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது.
இது தொடர்பாக கூடுதல் செஷன்ஸ் மாஜிஸ்திரேட் நேரில் ஆய்வு செய்து, அவர்கள் இருவருக்கும் பல்வேறு சொகுசு வசதிகள் செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளார். சிறை வளாகத்தில், இந்த சொகுசு வசதிகளுடன், தனியாக அவர்களுக்கு அலுவலக வசதியும் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஒரு புறம், சிறையில் கைதிகளுக்கு போதிய வசதிகள் அளிக்கப்படவில்லை. அதே நேரத்தில், மறுபுறம், இது போன்றவர்களுக்கு, சொகுசு வசதிகள் அளிக்கப்படுகின்றன. சிறை வளாகங்களில், தனி நிர்வாகம் நடக்கிறதா… இதை தடுப்பதற்கு மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? இவ்வாறு அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.