மட்லா : பா.ஜ., நடத்தும் ரத யாத்திரையை தடுக்க முயற்சிப்பவர்களின் தலைகள் ரதத்தின் சக்கரத்தில் வைத்து நசுக்கப்படும் என அக்கட்சியின் பெண் தலைவரும், நடிகையுமான லாகெட் சாட்டர்ஜி பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் டிசம்பர் 5,6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் பா.ஜ., சார்பில் ரத யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கட்சி தலைவர் அமித்ஷா துவக்கி வைக்க உள்ள இந்த ரத யாத்திரை 42 லோக்சபா தொகுதிகளை உள்ளடக்கியதாக இருக்கும். ரத யாத்திரையின் முடிவில் கோல்கட்டாவில் பிரம்மாண்ட பொதுக் கூட்டம் நடத்தப்பட உள்ளதாகவும், இதில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த ரத யாத்திரை குறித்து பேசிய லாகெட் சாட்டர்ஜி, மேற்குவங்கத்தில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதே இந்த ரத யாத்திரையின் நோக்கம். ஏற்கனவே நாங்கள் கூறியதை போன்று இந்த ரத யாத்திரையை தடுக்க முயற்சிப்பவர்களின் தலைகள் ரதத்தின் சக்கரத்தில் வைத்து நசுக்கப்படும் என்றார். திரிணாமுல் காங்.,கின் பர்தா சாட்டர்ஜி, பா.ஜ., தலைவர்கள் மேற்கு வங்கத்தின் அமைதியை சீர்குலைக்க முயல்வதாகவும், மேற்குவங்கத்தை மத ரீதியாக பிரிக்க நினைக்கும் பா.ஜ.,வினரை மக்கள் அனுமதிக்கமாட்டார்கள் எனவும், இந்த பிரித்தாளும் அரசியலை தடுப்போம் என கூறியதற்கு பதில் அளித்த லாகெட் சாட்டர்ஜி இவ்வாறு தெரிவித்துள்ளார்.