சென்னை : எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் சந்திரபாபு நாயுடுவின் முயற்சிக்கு திமுக முழு ஆதரவு தருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் திமுக தலைவர் ஸ்டாலினை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்து ஆலோசனை நடத்தினார். சந்திப்புக்கு பின் ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு இருவரும் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர்.
முழு ஆதரவு:
ஸ்டாலின் பேசியதாவது: பா.ஜ.,வை வீழ்த்த அனைத்து எதிர்கட்சிகளும் இணைய வேண்டும். இதற்காக சந்திரபாபு நாயுடு எடுத்துள்ள முயற்சிக்கு திமுக முழு ஆதரவை தருகிறது. ஆர்.பி.ஐ., சிபிஐ போன்ற அமைப்புகளை செயல்பட விடாமல் அச்சுறுத்தும் வகையில் பா.ஜ., அரசு நடந்து வருகிறது. விரைவில் அனைத்து தலைவர்களும் பங்கேற்கும் கூட்டத்தில் கலந்து கொள்வதாக சந்திரபாபு நாயுடுவிடம் கூறியுள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்.

ஓரணி:
சந்திரபாபு நாயுடு பேசியதாவது: ஜனநாயகத்தை காக்க காங்., உட்பட அனைத்து கட்சிகளுடனும் இணைந்து செயல்பட வேண்டும். திமுக.,வுடன் பல காலமாக நல்ல உறவு உள்ளது. நாட்டில் அமைதியற்ற சூழல் நிலவுகிறது; வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. மல்லையா போன்ற நபர்கள் கோடிக்கணக்கில் வங்கியில் கடன் பெற்று வெளிநாடு தப்பிவிட்டனர். காங்., கட்சியுடன் வேறுபாடு இருந்தாலும் ராகுலை சந்தித்தேன். அடுத்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திக்க உள்ளேன். வலிமையான மாநில தலைவர்கள் அனைவரும் ஓரணியில் இணைகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே, காங்கிரஸ் தலைவர் ராகுல், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா ஆகியோரை சந்திரபாபு நாயுடு சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.